/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நதிகள் தேசியமயமாக்கப்படணும் விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்
/
நதிகள் தேசியமயமாக்கப்படணும் விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்
நதிகள் தேசியமயமாக்கப்படணும் விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்
நதிகள் தேசியமயமாக்கப்படணும் விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்
ADDED : மே 28, 2024 11:24 PM
உடுமலை:'மாநிலங்களின் நீர் தேவை பூர்த்தியாக, நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும்' என களஞ்சியம் விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, அதன் ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம் கூறியதாவது:
தமிழகத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்ய கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களை தான் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.
அம்மாநிலங்கள், நம் மாநிலத்துக்கு தர வேண்டிய நீரை உரிய அளவில் தருவதில்லை. காவிரி நதி நீரை பெறுவதில், அவ்வப்போது காவிரி நடுவர் மன்றம் தலையிட வேண்டியிருக்கிறது.
தமிழகத்தில் பெய்யும் பருவமழை, ஆறு, ஓடைகளில் இருந்து வரும் நீர் தான், நம் மாநில மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்கிறது. இதற்கிடையில், காவிரி நதி நீரை, கர்நாடக அரசு வழங்க முரண்டு பிடிக்கிறது. கேரள அரசு, பவானி, அமராவதி உள்ளிட்ட ஆறுகளின் இடையே அணைக் கட்டுகிறது.
இதனால், தமிழக அரசு, மாநிலத்துக்கு தேவையான நீரை போராடி தான் பெற வேண்டியிருக்கிறது.
இதனால், கோடையின் போது, நிலத்தடி நீர் அதள பாதாளத்துக்கு சென்று விடுகிறது. 1,600 முதல், 1,800 அடி ஆழம் வரை 'போர்வெல்' தோண்டுகின்றனர்; இது, தவிர்க்கப்பட வேண்டும். எனவே, நதிகளை தேசியமயமாக்கி, அந்தந்த மாநிலங்களின் தேவைக்கேற்ப, உரிய அளவு நீரை வழங்குவதன் வாயிலாக மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.
கோடை மழையை பயன்படுத்தி விவசாய நிலங்களில் பண்ணைக்குட்டை அமைக்க, வேளாண் பொறியியல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.