/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறைகளைக் கொட்டித்தீர்த்த விவசாயிகள்; வாய்க்காலில் இறந்த கோழிகள் l அமராவதி தண்ணீர் திருட்டு
/
குறைகளைக் கொட்டித்தீர்த்த விவசாயிகள்; வாய்க்காலில் இறந்த கோழிகள் l அமராவதி தண்ணீர் திருட்டு
குறைகளைக் கொட்டித்தீர்த்த விவசாயிகள்; வாய்க்காலில் இறந்த கோழிகள் l அமராவதி தண்ணீர் திருட்டு
குறைகளைக் கொட்டித்தீர்த்த விவசாயிகள்; வாய்க்காலில் இறந்த கோழிகள் l அமராவதி தண்ணீர் திருட்டு
ADDED : மார் 01, 2025 06:31 AM

திருப்பூர்; மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.
டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், கூட்டுறவு இணை பதிவாளர் பிரபு, வேளாண்துறை இணை இயக்குனர் சுந்தரவடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், விவசாயிகள் பேசியதாவது:
அலங்கியம் விவசாயி பழனிசாமி: தாராபுரம் பகுதியில், நெல் அறுவடை நடப்பதால், நெல் கொள்முதல் நிலையம் உடனடியாக திறக்க வேண்டும்.
மூலனுார் குளங்களுக்குஅமராவதி உபரிநீர்
தாராபுரம் விவசாயி ரத்தினம்: அமராவதி ஆற்றின் உபரி நீரை கொண்டு, கரூர், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குளம், குட்டைகளை நிரப்ப திட்டமிட்டுள்ளது போல், திருப்பூர் மாவட்டத்தில் மூலனுார் உள்ளிட்ட வறட்சி பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளையும் நிரப்ப வேண்டும்.
வெள்ளகோவில் பி.ஏ.பி., விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி:
கான்டூர் கால்வாய், சர்க்கார்பதி கால்வாய் பணிகளுக்காக, அடிக்கடி பி.ஏ.பி., தண்ணீர் வருவது தடைபடுகிறது; 14 நாட்களில் ஒரு சுற்று என்ற நிலைமாறி, 30 நாளாகிவிட்டது. பொங்கலுார் வாய்க்காலில், இறந்த கோழிகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.
மின் இணைப்புக்காக18 ஆண்டுகள் 'தவம்'
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சின்னசாமி:
விதை நிலக்கடலை, கிலோ, 65 ரூபாய்க்கு விற்கப்படுகிறது; வேளாண் அலுவலகத்தில், 83 ரூபாய்க்கு விற்கின்றனர். மின் இணைப்பு கோரிய விவசாயிகள் சிலர், 18 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.
வேலை உறுதி திட்டத்தில், நிலம் எந்த கிராமத்தில் இருந்தாலும், பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன்:
மாவட்டத்தில் உள்ள சில கல் குவாரிகள், 800 டன் அளவுக்கு, வெடிமருந்து பயன்படுத்தியுள்ளன. கல்குவாரிகள் முறைகேடாக சம்பாதிப்பதை தடுத்து, அரசுக்கு வருவாய் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
உடுமலை விவசாயி மவுனகுருசாமி:
சர்க்கார்பதியில் மின் உற்பத்தி செய்வதால், பி.ஏ.பி., தண்ணீர் கடைமடைக்கு வருவதில்லை. மின்மிகை மாநிலமாக இருப்பதால், சர்க்கார் பதியில் மின் உற்பத்தி செய்யாமல், தண்ணீரை வாய்க்காலில் திருப்பிவிட வேண்டும்.
மோட்டார் மூலம்தண்ணீர் திருட்டு
திருப்பூர் மாவட்ட கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் வீரப்பன்:
அமராவதி ஆற்றில் இருந்தும், வலதுபுறம்தண்ணீர் பிரியும், கடத் துார் வாய்க்காலில் இருந்தும், 250 மோட்டார்களை வைத்து தண்ணீர் எடுக்கின்றனர். முறைகேடாக, ஆற்றில் இருந்து, திண்டுக்கல் மாவட்ட பகுதிகளுக்கு தண்ணீர் திருடுகின்றனர். பொதுப்பணித்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும். அமராவதி 'ஷட்டர்' பழுதுபார்ப்பு பணியை முடிக்க வேண்டும்.
காப்பீடு வசூலித்தும்கிடைக்காத இழப்பீடு
தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மதுசூதனன்:
குறைகேட்பு கூட்டத்தில் அளிக்கும் மனுக்களுக்கு முறையாக பதில் கிடைப்பதில்லை. உடுமலையில், தென்னை வளர்ச்சி வாரியம் இருந்தும், தென்னையை பாதுகாக்க உதவி கிடைப்பதில்லை. இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீடு வசூலித்தும், உரிய இழப்பீடு வழங்குவதில்லை.
குடிமங்கலம் விவசாயி சண்முகசுந்தரம்:
கொள்ளுப்பாளையத்தில், மூன்று ஏக்கரில், காலிபிளவர் பயிரிட்டிருந்தோம். அருகில் இருந்த தேங்காய் மட்டையை துகளாக மாற்றும் ஆலை வெளியேற்றிய கழிவுகளால், காலிபிளவர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காலிபிளவர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது; உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்.
எப்போது இழப்பீடு?
பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகளும், தெருநாய்கள் தாக்கி ஆடுகள் பலியானதற்கு எப்போதுதான் இழப்பீடு கிடைக்குமென கேள்வி எழுப்பினர். குறிப்பாக, சந்தை மதிப்பில் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர். பிராணிகள் நல சங்கத்தினர் தெருநாயை மட்டும் பாதுகாக்கின்றனர்; அதனால் ஏற்படும் பாதிப்பை உணர வேண்டும்; கூட்டு குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தீராத வெள்ளை ஈ தொல்லை
திருப்பூர் மாவட்டத்தில், 75 ஆயிரம் எக்டர் அளவுக்கு தென்னை பயிரிட்டுள்ளோம். தென்னை வளர்ச்சி வாரியம் இருந்தும், வெள்ளை ஈ தொல்லையை கட்டுப்படுத்த முடியவில்லை. விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். மஞ்சள் காகிதத்தில், விளக்கெண்ணெய் தேய்த்து மரத்தில் கட்டவும் என்றெல்லாம் கூறாமல், தமிழக அரசு, ஒருங்கிணைந்த தடுப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று, தென்னை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.