/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அலுவலகப் பணியுடன் களப்பணி ஊரக வளர்ச்சி அலுவலர்கள் புலம்பல்
/
அலுவலகப் பணியுடன் களப்பணி ஊரக வளர்ச்சி அலுவலர்கள் புலம்பல்
அலுவலகப் பணியுடன் களப்பணி ஊரக வளர்ச்சி அலுவலர்கள் புலம்பல்
அலுவலகப் பணியுடன் களப்பணி ஊரக வளர்ச்சி அலுவலர்கள் புலம்பல்
ADDED : செப் 03, 2024 11:42 PM
பல்லடம்:அலுவலகப் பணியுடன் களப்பணியும் வழங்குவதால், மன உளைச்சல் ஏற்பட்டு வருவதாக, வெளியே கூற முடியாமல், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் புலம்பி வருகின்றனர்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை சார்ந்த அலுவலர்கள் சிலர் கூறியதாவது:
தேசிய வேலை உறுதித் திட்டம், மத்திய, மாநில அரசுகளின் வீடு கட்டும் திட்டங்கள், டிடிசிபி., அனுமதி, குடிநீர், தெரு விளக்கு, ரோடு வசதி உட்பட கிராம மக்களின் அடிப்படை தேவைகள் தொடர்பான பல்வேறு பணிகளையும் கவனித்து வருகிறோம்.
இத்துடன், மக்களுடன் முதல்வர் திட்டம், வண்டல் மண் அள்ளும் பணியை கண்காணிப்பது, கனவு இல்ல திட்டம் என, தமிழக அரசின் பல்வேறு திட்டப் பணிகளையும் பார்க்க வேண்டி உள்ளது. இதற்காக நடத்தப்படும் முகாம்களிலும் பங்கேற்க வேண்டும்.
அத்துடன், கலெக்டர் அலுவலக குறைதீர்க்கும் கூட்டங்களில் மூலம் கிடைக்கப்பெறும் புகார் மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும். புதிதாக கொண்டு வரப்படும் பெரும்பாலான திட்டங்கள், ஊரக வளர்ச்சித் துறை மூலமாகவே பின்பற்றப்பட வேண்டி உள்ளது.
இத்தனை வேலைப்பளுவுக்கு மத்தியில், அதிகாரிகள் அவ்வப்போது 'ஜூம்' மீட்டிங்கில் பங்கேற்கச் சொல்வதால், கிடைக்கும் நேரமும் வீணாகின்றன. இதனால், கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதுடன், வழக்கமான பணிகளும் தேங்குகின்றன என்றனர். அலுவலகப் பணி மேற்கொள்பவர்களை, களப்பணிக்கும் அனுப்புவதால் கூடுதல் பணிச் சுமையுடன், மன உளைச்சலும் ஏற்படுகிறது.
எனவே, இது குறித்து உயரதிகாரிகள் ஆலோசித்து, எங்களுக்கான பணிப்பளுவை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.