/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒன்றியத்தில் ஐந்து 'மாதிரி ஊராட்சிகள்' துாய்மை இந்தியா திட்டத்தில் தேர்வு
/
ஒன்றியத்தில் ஐந்து 'மாதிரி ஊராட்சிகள்' துாய்மை இந்தியா திட்டத்தில் தேர்வு
ஒன்றியத்தில் ஐந்து 'மாதிரி ஊராட்சிகள்' துாய்மை இந்தியா திட்டத்தில் தேர்வு
ஒன்றியத்தில் ஐந்து 'மாதிரி ஊராட்சிகள்' துாய்மை இந்தியா திட்டத்தில் தேர்வு
ADDED : மே 28, 2024 11:32 PM
உடுமலை;உடுமலை ஒன்றியத்தில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ஐந்து ஊராட்சிகள் 'மாதிரி ஊராட்சிகளாக' தேர்வு செய்யப்பட்டுள்ளன.
துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கிராமங்களின் சுகாதாரத்தை சீராக பராமரிக்கவும், உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
திடக்கழிவு மேலாண்மை, தனி நபர் இல்லக்கழிப்பிட திட்டம், திடக்கழிவு மேலாண்மையில் குப்பையிலிருந்து உரம் தயாரித்தல், துாய்மைப்பணியாளர்கள் நியமனம் என, பல்வேறு திட்டப்பணிகள் நடைமுறையில் உள்ளன.
துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ஊராட்சிகளில் பொது சுகாதாரம், அரசு கட்டமைப்பு வசதிகள், தனிநபர் சுகாதாரம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், 'மாதிரி ஊராட்சிகளாக' தேர்வு செய்யும் பணிகள் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், அனைத்து வீடுகளிலும் தனிநபர் இல்லக்கழிப்பிடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மகளிர் குழுவினருக்கான கிராம சேவை மையம், அரசுப்பள்ளி, அங்கன்வாடி, ஊராட்சி அலுவலகம், நுாலகம் என, பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை அரசு கட்டமைப்புகள்,
குப்பைக்கழிவுகளை வீடுதோறும் முறையாக சேகரித்து மக்கும் கழிவுகளை உரக்குழிகளில் கொட்டுவதும், மக்காத கழிவுகளை ஊராட்சி மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்துவதும், உரக்குடில் அமைத்து மண் புழு உரம் தயாரிப்பது, பொது சுகாதார வளாகம் உள்ளிட்ட தேவைகளில் தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும்.
இந்த அடிப்படை தேவைகள் குறித்து, மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டு, அவர்கள் ஆய்வு நடத்தினர்.அக்குழுவில், ஊரக வளர்ச்சித்துறை, கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சுகாதாரத்துறை, அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இவ்வாறு ஆய்வு நடத்தி, உடுமலை ஒன்றியத்தில் ஐந்து ஊராட்சிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், 'மாதிரி ஊராட்சிகளாக' தேர்வு செய்யப்பட்டு, சான்றளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆண்டியகவுண்டனுார், ஜல்லிபட்டி, மொடக்குப்பட்டி, குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி உள்ளிட்ட ஐந்து ஊராட்சிகளும் மாதிரி ஊராட்சிகளாக தேர்வாகியுள்ளன.
ஒன்றிய அலுவலர்கள் கூறியதாவது:
ஐந்து ஊராட்சிகளில் சிறப்பு குழுவினர் பார்வையிட்டு, அனைத்து வசதிகள் குறித்தும் ஆய்வு செய்து மாதிரி ஊராட்சிகளாக தேர்வாகியுள்ளன. இதே போல், மீதமுள்ள ஊராட்சிகளும், அனைத்து பிரிவுகளிலும் தன்னிறைவு பெறுவது தான், துாய்மை இந்தியா திட்டத்தின் இலக்காகவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு, தெரிவித்தனர்.