/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூவும், பிஞ்சும் உதிருது; காயும் சரியில்லை! தக்காளி சாகுபடியில் நஷ்டம்
/
பூவும், பிஞ்சும் உதிருது; காயும் சரியில்லை! தக்காளி சாகுபடியில் நஷ்டம்
பூவும், பிஞ்சும் உதிருது; காயும் சரியில்லை! தக்காளி சாகுபடியில் நஷ்டம்
பூவும், பிஞ்சும் உதிருது; காயும் சரியில்லை! தக்காளி சாகுபடியில் நஷ்டம்
ADDED : ஜூன் 23, 2024 11:51 PM

உடுமலை:சீதோஷ்ண நிலை மாற்றம் மற்றும் நோய்த்தாக்குதல் காரணமாக, தக்காளி சாகுபடியில், விளைச்சல் முற்றிலுமாக பாதித்துள்ளது; தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை வட்டாரத்தில், கிணற்றுப்பாசனத்துக்கு பிரதான சாகுபடியாக தக்காளி உள்ளது. ஒவ்வொரு சீசனிலும், 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ஏக்கர் வரை இச்சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது; உடுமலை சந்தையில் இருந்து கேரளா மட்டுமல்லாது, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, தக்காளி விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.
நோய்த்தாக்குதல்
நாற்றுப்பண்ணைகளில் இருந்து, 20 நாட்கள் வளர்க்கப்பட்ட நாற்றுகளை வாங்கி நடவு செய்கின்றனர்; 60 நாட்களுக்கு பிறகு தக்காளி அறுவடை செய்யலாம். ஆனால், இந்த சீசனில், தக்காளி செடிகள் குறிப்பிட்ட நாட்கள் வளர்ந்தும், பூ விடவில்லை. பல்வேறு மருந்து தெளித்தும், கூடுதலாக உரமிட்டும் எவ்வித பலனும் இல்லை.
செடிகளுக்கு அதிக நாட்கள் வயதாகியுள்ள நிலையில், இனி பூ விட்டாலும் தரமான காய்கள் கிடைக்காது. குறைவாக பிடித்துள்ள காய்களும் திரட்சியில்லாமல், சிறிதாக காணப்படுகிறது. இதனால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: தக்காளி சாகுபடியில், சீதோஷ்ண நிலை மாற்றம், நோய்த்தாக்குதலால், விளைச்சல் முற்றிலுமாக பாதித்துள்ளது. செடிகள் குறிப்பிட்ட நாட்களில், பூ விடவில்லை; பிஞ்சு மற்றும் காய் உதிர்தலும் அதிகளவு உள்ளது.
நோய்த்தாக்குலை கட்டுப்படுத்த வழிதெரியவில்லை. ஏக்கருக்கு, 15 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக செலவிட்டுள்ளோம்; காய்ப்பு இல்லாததால், ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
செடிகளை அகற்றவும் தயக்கமாக உள்ளது. இது குறித்து தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு செய்து நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த வழிகாட்டுதல் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த சீசனில் சாகுபடி பரப்பு பாதியாக குறைந்து விடும். இவ்வாறு, தெரிவித்தனர்.