/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குட்டீஸ் நடத்திய உணவுத்திருவிழா
/
குட்டீஸ் நடத்திய உணவுத்திருவிழா
ADDED : மார் 08, 2025 11:07 PM

சிறப்பு விருந்தினர்களை பேண்ட் வாத்தியத்தோடு வரவேற்கின்றனர், பூலுவபட்டி மாநகராட்சி பள்ளி மாணவர்கள். மாநகராட்சி பள்ளி தானா என்ற வியப்பு மேலோங்குகிறது. மண் மனம் மாறாமல் மண் குவளையில் கம்பங்கூழ், மோர், தினை லட்டு வழங்கி உணவுத்திருவிழா துவங்குகிறது.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பு மாணவரும், தலா இரண்டு ஆசிரியர்களுடன் இணைந்து உணவுத்திருவிழாவுக்கான அரங்குகளை அமைத்திருந்தனர். ஊட்டிவர்க்கி, கம்பம் பன்னீர் திராட்சை, கன்னியாகுமரி கிராம்பு, வாணியம்பாடி பிரியாணி, மார்த்தாண்டம் தேன், விருதுநகர் பரோட்டா, ஸ்ரீ வில்லிபுத்துார் பால்கோவா, திருநெல்வேலி அல்வா வாங்கி காட்சிப்படுத்தப் பட்டிருந்தது.
நாம் தினசரி சாப்பிடும் திட, திரவ உணவுகள் அவற்றால் விளையும் நன்மை, தீமை 'தீதும் நன்றும்' அரங்கில் குழந்தைகள் அழகாக எடுத்துரைத்தனர். 'தீமை தரும் உணவுகள்' அரங்கில் உடனடி பாஸ்புட் உணவு, எண்ணெயில் பொறிக்கப்பட்டு உணவுகளால் ஏற்படும் வயிறு உபாதை குறித்து பெற்றோருக்கு குட்டீஸ் விளக்கம் தந்தனர்.
ஒவ்வொரு காய்கள், பழங்கள் அவற்றில் நிறைந்துள்ள பலன்கள் குறித்த தனி அட்டவணை பழங்களுடன் காட்சிப்படுத்தப் பட்டிருந்தது. குட்டீஸ் பிரத்யேக சீருடை அணிந்து, சமையலர் வேடமணிந்து தலையில் தொப்பி, தோள், மார்பில் 'ஏப்ரான்' (துணி) சகிதமாக வந்திருந்தனர். அட்மிஷன் நேரத்தில், தனியார் பள்ளிகளுக்கு நிகராக பூலுவப்பட்டி பள்ளியில் நடத்தப்பட்ட உணவுத்திருவிழா, பெற்றோர் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.