/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டுக்கூடு விலை அதிகரிப்பால் மகிழ்ச்சி கைகொடுக்கும் வெளிமாநில முட்டை
/
பட்டுக்கூடு விலை அதிகரிப்பால் மகிழ்ச்சி கைகொடுக்கும் வெளிமாநில முட்டை
பட்டுக்கூடு விலை அதிகரிப்பால் மகிழ்ச்சி கைகொடுக்கும் வெளிமாநில முட்டை
பட்டுக்கூடு விலை அதிகரிப்பால் மகிழ்ச்சி கைகொடுக்கும் வெளிமாநில முட்டை
ADDED : செப் 01, 2024 02:05 AM

உடுமலை;தமிழகத்தில், திருப்பூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டுக்கூடு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய, மாநில அரசுகளின் முட்டை வித்தகங்களிலிருந்து, முட்டைகள் பெறப்பட்டு, இளம்புழு வளர்ப்பு மனைகளில், ஏழு நாட்கள் வளர்க்கப்பட்டு, உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. பட்டு புழு வளர்ப்பு மனைகளில், மல்பெரி இலை உணவாக வழங்கப்பட்டு, 21 நாட்களில் கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.
தரமற்ற முட்டை வினியோகம், விலை சரிவு உள்ளிட்ட காரணங்களினால் இத்தொழில் நலிவடைந்து வந்தது. தற்போது, விவசாயிகள் மத்திய பட்டு வளர்ச்சி வாரிய முட்டைகளிலிருந்து, உற்பத்தி செய்யப்படும் புழுவை வாங்கி வளர்த்து வருவதால், உற்பத்தி அதிகரித்துள்ளதோடு, விலையும் உயர்ந்து வருவதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நல சங்க மாநில தலைவர் செல்வராஜ் கூறியதாவது:
மாநில அரசு முட்டை வித்தகங்களில் தரமற்ற முட்டை வினியோகம் செய்யப்பட்டதால், உற்பத்தி பாதித்து சிக்கல் ஏற்பட்டது. 100 முட்டை தொகுதிக்கு, 40 கிலோ மட்டுமே பட்டுக்கூடு உற்பத்தியானது.
தற்போது, கர்நாடக மாநிலம் மத்திய பட்டு வளர்ச்சி வாரியத்தில், முட்டை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், புழுக்கள் ஒரே வடிவத்தில் வளர்வதோடு, கூடு கட்டும் திறனும் திருப்தியாக உள்ளது. இதனால், 80 கிலோ வரை பட்டுக்கூடு உற்பத்தியாகிறது.
இந்நிலையில், விலையும் உயர்ந்து வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டாக, ஒரு கிலோ பட்டுக்கூடு, ரூ.450 வரை மட்டுமே விற்று வந்த நிலையில், தற்போது, ரூ.650 வரை விலை கிடைக்கிறது. இதனால், விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
இவ்வாறு, கூறினார்.