/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நான்கு வழிச்சாலை பணி இழுபறி; விபத்துகள் அதிகரிப்பு
/
நான்கு வழிச்சாலை பணி இழுபறி; விபத்துகள் அதிகரிப்பு
நான்கு வழிச்சாலை பணி இழுபறி; விபத்துகள் அதிகரிப்பு
நான்கு வழிச்சாலை பணி இழுபறி; விபத்துகள் அதிகரிப்பு
ADDED : மார் 04, 2025 06:10 AM
உடுமலை; பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பணி இழுபறி காரணமாக, விபத்துகளும், சட்ட விரோத சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உடுமலை வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனால், வாகன போக்குவரத்து அதிகமாகி, அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது.
நெரிசலை குறைக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) சார்பில், பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் கமலாபுரம் வரையிலான, நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் பணிகள் நிறைவடைந்து, போக்குவரத்திற்கு ரோடு திறக்கப்பட்டுள்ளது. ஆனால், மடத்துக்குளம் மைவாடி முதல், பொள்ளாச்சி வரையிலான பணிகள், பல இடங்களில் முடிவடையாமல், இழுபறியாகி வருகிறது.
பல இடங்களில் பாலம் மற்றும் ரோடு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் வாகனங்களில் வருவோர், எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகும் சம்பவம் நடக்கிறது. அதிலும், மடத்துக்குளம், வேடபட்டி, கழுகரை பாலம் பகுதியில், அடிக்கடி விபத்து ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
அதே போல், பணி முடிந்து, வாகன போக்குவரத்து இல்லாத பகுதிகள் மது அருந்தும் மையமாகவும், சட்ட விரோத செயல்கள் நடக்கும் பகுதியாகவும் மாறியுள்ளது.
ரோடுகள் முழுவதும் மது பாட்டில்களாகவும், வழிப்பறி சம்பவங்களும் நடந்து வருகிறது.
இப்பணிகள் முடிவடையாமல் இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
எனவே, நான்கு வழிச்சாலை பணியை விரைந்து முடித்து, போக்குவரத்திற்கு திறந்து விட வேண்டும். இதன் வாயிலாக, அப்குதியில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.