/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நுண்ணீர் பாசனம் அமைக்க நிதி ஒதுக்கியாச்சு! மடத்துக்குளம் விவசாயிகளுக்கு அழைப்பு
/
நுண்ணீர் பாசனம் அமைக்க நிதி ஒதுக்கியாச்சு! மடத்துக்குளம் விவசாயிகளுக்கு அழைப்பு
நுண்ணீர் பாசனம் அமைக்க நிதி ஒதுக்கியாச்சு! மடத்துக்குளம் விவசாயிகளுக்கு அழைப்பு
நுண்ணீர் பாசனம் அமைக்க நிதி ஒதுக்கியாச்சு! மடத்துக்குளம் விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 10, 2024 12:18 AM

உடுமலை;மடத்துக்குளம் வட்டாரத்திற்கு, நிதியாண்டில், தோட்டக்கலைத்துறை வாயிலாக, 200 ஹெக்டேருக்கு நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது; விவசாயிகள் பயன்பெற தோட்டக்கலைத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
மடத்துக்குளம் வட்டாரத்தில், பரவலாக கிணற்றுப்பாசனத்துக்கு காய்கறி சாகுபடி செய்து வருகின்றனர். இதில், நுண்ணீர் பாசன முறையால் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.
'இம்முறையில், பயிருக்கு தேவையான குறைவான வீதத்தில் நீண்ட நேரம், மண்ணின் தன்மைக்கேற்ப பிளாஸ்டிக் சொட்டுவான்கள் வாயிலாக, நேரடியாக பயிரின் வேர் பகுதிக்கு தண்ணீர் நாள்தோறும் செலுத்தலாம்.
நன்கு திட்டமிடப்பட்டு குழாய்களில், தண்ணீர் எடுத்துச்செல்வதால் சேதம் முற்றிலுமாக தவிர்க்கப்படுகிறது. தேவையான அளவில், தேவையான நேரத்தில் பாசன நீர் கிடைப்பதால் பயிர் நன்கு வளர்ந்து நல்ல மகசூலை கொடுக்கிறது.
இம்முறையில், 60 முதல் 80 சதவீதம் வரை நீர் பயன்படுதிறன் அதிகரிக்கிறது. இவ்வாறு சேமிக்கப்பட்ட நீரைக்கொண்டு, அதிகப்படியான நிலப்பரப்பில் பாசனம் செய்ய முடியும்.
பயிருக்கு தேவையான அளவில் உரங்களை பயிர் வளர்ச்சிக்கேற்ப பாசன நீருடன் பகிர்ந்து அளிக்க முடியும். உரம் பயன்படுதிறன் இரு மடங்கு அதிகரிப்பதனால், ரசாயன உரத்தேவையில், 30 முதல் 45 சதவீதம் வரை குறைகிறது.
மிகக் குறைவான வேலையாட்கள் பயன்பாடு, குறைந்த நோய் மற்றும் பூச்சி தாக்கம், களை வளர்வது முழுமையாக கட்டுப்படுத்துதல், நிலம் சமப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இதனால், சாகுபடி செலவு கணிசமாக குறைகிறது,' என தோட்டக்கலைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது: நுண்ணீர் பாசன முறையில் விவசாயிகளுக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கிறது. மடத்துக்குளம் வட்டாரத்திற்கு, 2024 - 25ம் நிதியாண்டில், 200 ஹெக்டேருக்கு தோட்டக்கலைத்துறை வாயிலாக, நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 1 கோடியே 65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே இந்த மானியத்தை பயன்படுத்தி, விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களான தக்காளி, வெங்காயம், மிளகாய், கத்திரி, வெண்டை, பூசணி, கொத்தமல்லி உள்ளிட்ட காய்கறி பயிர்களுக்கு நுண்ணீர் பாசனம் அமைக்கலாம்.
மேலும், தர்பூசணி, பப்பாளி, சப்போட்டா, எலுமிச்சை, மா, கொய்யா, நெல்லி, பலா, மாதுளை போன்ற பழ வகைப் பயிர்களுக்கும், பாகல், புடலை, பீர்க்கன், சுரைக்காய் போன்ற பந்தல் காய்கறி வகை பயிர்களுக்கும் தென்னை போன்ற பல்லாண்டு பயிர்களுக்கும் நுண்ணீர் பாசனம் அமைத்துக் கொள்ளலாம்.
இதில் சிறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியமும், பெரிய விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. ஏற்கனவே நுண்ணீர் பாசனம் அமைத்து மானியம் பெற்று, 7 ஆண்டு முடிந்து இருந்தால் மீண்டும் புதிதாக மானியங்களை பெற்றுக் கொள்ளலாம்.
அரசு மானியத்தில் தெளிப்பு நீர் பாசனம் பெற்ற விவசாயிகள், 3 ஆண்டுகள் முடிந்திருந்தால் புதிதாக சொட்டு நீர் அமைத்துக்கொள்ள மானியம் பெறலாம்.
இந்த மானியங்களைப் பெற சிட்டா, அடங்கல், உரிமைச் சான்று, நில வரைபடம், கூட்டு வரைபடம், ரேஷன் கார்டு நகல், ஆதார் கார்டு நகல், வங்கி கணக்கு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -- 2 ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.
மேலும் விபரங்களுக்கு, துங்காவி உள்வட்டத்தை சார்ந்த விவசாயிகள், உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரன் 96598-38787; மடத்துக்குளம் உள்வட்ட விவசாயிகள் உதவி தோட்டக்கலை அலுவலர் நித்யராஜ் 63821-29721 என்ற மொபைல் போன் எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு, சுரேஷ்குமார் தெரிவித்தார்.

