ADDED : செப் 07, 2024 12:41 AM
திருப்பூர்:விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, ஹிந்து முன்னணி சார்பில் மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன.
அதே போல் பல்வேறு ஹிந்து அமைப்புகள் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும், பொது இடங்கள், கோவில்கள், வீடுகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்.அவ்வகையில் நேற்று விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கு விநாயகர் சிலைகள் பகுதிவாரியாக பொறுப்பாளர்கள் மூலம் கொண்டு சேர்க்கப்பட்டன. சிலைகள் கொண்டு சேர்க்கப்பட்ட இடங்களில், இன்று காலை முதல் சிறப்பு பூஜை - வழிபாடுகள் நடத்தப்படும்.
போலீசார் ரோந்து
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். சிலைகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில், உரிய பகுதி போலீசார் நேரில் சென்று பார்வையிட்டனர். சிலைகள் அமைத்த அமைப்புகள் மூலமாகவே பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சிலைகள் அமைந்துள்ள இடங்களில் அவற்றின் பொறுப்பாளர்கள் குறித்த விவரங்களையும் போலீசார் பதிவு செய்து சென்றனர்.சிலைகள் அமைப்பு மற்றும் விசர்ஜனத்தின் போது, போலீசார் ஏற்கனவே தெரிவித்த அறிவுரைகள் பின்பற்றி ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.