/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகை வியாபாரியிடம் போலீசாக நடித்து ரூ.1.10 கோடி பறித்து சென்ற கும்பல்
/
நகை வியாபாரியிடம் போலீசாக நடித்து ரூ.1.10 கோடி பறித்து சென்ற கும்பல்
நகை வியாபாரியிடம் போலீசாக நடித்து ரூ.1.10 கோடி பறித்து சென்ற கும்பல்
நகை வியாபாரியிடம் போலீசாக நடித்து ரூ.1.10 கோடி பறித்து சென்ற கும்பல்
ADDED : மார் 06, 2025 07:05 AM

திருப்பூர்; திருப்பூர் அருகே காரில் வந்த கரூர் நகை வியாபாரியிடம், நான்கு பேர் கொண்ட கும்பல் போலீஸ் என கூறி, 1 கோடியே, 10 லட்சத்தை பறித்து சென்றது குறித்து விசாரணை நடக்கிறது.
கரூர் மாவட்டம், கீழநஞ்சையை சேர்ந்தவர் வெங்கடேஷ், 60; நகை வியாபாரி. வியாபாரம் தொடர்பாக அவ்வப்போது கோவை சென்று நகைகளை வாங்கி வருவார். அவ்வகையில், நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல், கரூரில் இருந்து காரில் கோவைக்கு சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் ஜோதி, 60 என்பவர் ஓட்டி சென்றார்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் - சம்பந்தம்பாளையம் அருகே, காரில் வந்த ஒரு கும்பல், வெங்கடேஷ் சென்ற காரை வழிமறித்தது. காரில் இருந்த நான்கு பேர், தங்களை போலீஸ் என கூறி அறிமுகப்படுத்தி கொண்டு, 'காரில் கஞ்சா கடத்துவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால், காரை சோதனை செய்ய வேண்டும்,' என கூறியுள்ளனர்.
'நகை வாங்க கோவைக்கு செல்வதாக வெங்கடேஷ் கூறியும் கூட, காரில் இருந்த ஒரு கோடியே, 10 லட்சம் ரூபாயை பார்த்து, 'இவ்வளவு பணம் எதற்கு. ஆவணங்கள் எங்கே?' என கேட்டு, 'ஆவணங்களை சமர்ப்பிக்கும் வரை, கார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்,' என்று தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, வெங்கடேஷன் காரில், கும்பலில் வந்த இருவர் ஏறி கொண்டு, தாராபுரம் நோக்கி செல்லுமாறு கூறினர். அதன்படியே கார் சென்று கொண்டிருந்த போது, அவிநாசிபாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட குண்டடம் பிரிவில், காரை நிறுத்தி சொல்லி, இருவரையும் தாக்கி, 1.10 கோடி ரூபாய், மொபைல் போனை பறித்து தப்பினர். பணத்தை பறிகொடுத்த வெங்கடேஷ், அவிநாசிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை பறித்து சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.
'போலி' போலீஸ் கும்பல்
போலீசார் கூறியதாவது:
தங்களை போலீஸ் என கூறி பணம் பறித்து சென்ற கும்பல் குறித்து விசாரணை நடக்கிறது. கரூரிலேயே வெங்கடேஷ் காரை நோட்டமிட்டு பின்தொடர்ந்து வந்துள்ளனர். பணம் இருப்பது குறித்து தெரிந்த நபர்கள் தான் தகவல் கொடுத்திருக்க வேண்டும். காரில் வந்த, நான்கு பேரும் காக்கி நிற பேன்ட், கலர் சட்டை அணிந்திருந்தாக இருந்ததாக கூறுகின்றனர். உண்மையிலேயே இவ்வளவு பெரிய தொகை பணம் கொண்டு வந்து பறி கொடுத்தனரா என்பது உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணை நடத்துகிறோம். அப்பகுதியில் உள்ள அனைத்து 'சிசிடிவி' கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வழிமறித்தது ஒரு இடம், பணம் பறித்து சென்றது மற்றொரு இடம் என்பதால், அவிநாசிபாளையம் ஸ்டேஷனில் வழக்குபதிவு செய்யப்பட்டது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.