ADDED : பிப் 25, 2025 06:46 AM

பல்லடம்; பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள், நெகிழிப்பைகள், உணவுப் பொருள் பாக்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்து குப்பைகளும் கழிவுகளும் ரோட்டுக்கு வருகின்றன.
இவற்றால், சுகாதார சீர்கேடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே, திடக்கழிவு மேலாண்மை என்பது கேள்விக்குறியாக உள்ளது. மாநகராட்சி, நகராட்சி பகுதிகள் மட்டுமன்றி, கிராம ஊராட்சிகளிலும், குப்பை மேலாண்மை என்பது, தீர்க்க முடியாத பிரச்னையாக உள்ளது.
சேகரமாகும் குப்பைகளை, தரம் பிரிக்க முடியாமலும், அவற்றை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்று தெரியாமலும், உள்ளாட்சி நிர்வாகங்கள் விழி பிதுங்கி நிற்கின்றன. பாழடைந்த கிணறுகள், பயன்பாடற்ற பாறைக்குழிகள், குளம் குட்டைகள் உள்ளிட்டவற்றில் குப் பைகளை கொட்டி வருகின்றன. இதனால், நீர்நிலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.
பல்லடம் அருகே, தெற்குப்பாளையம் கிராமத்தில் நீர் ஆதாரக் குட்டை உள்ளது. கிராம பகுதிகளில் இருந்து வரும் நீரோடை, பல்லடம் நகர பகுதி வழியாக, ஒன்பதாம் பள்ளம் குட்டையை சென்றடைகிறது. இங்கிருந்து, தெற்குபாளையம், சின்னக்கரை வழியாக நொய்யலை சென்றடைகிறது. இவ்வாறு, மழைநீர் செல்வதற்காக உண்டாக்கப்பட்ட தெற்குபாளையம் குட்டை, குப்பைகள் கழிவுகள் கொட்டப்பட்டு, தற்போது, நீர் ஆதாரத்தை இழந்து குப்பை கிடங்காக மாறியுள்ளது.