/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசுப்பணியை அலங்கரிக்கும் மங்கையர்
/
அரசுப்பணியை அலங்கரிக்கும் மங்கையர்
ADDED : மார் 07, 2025 10:58 PM
''பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும், பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி''.
இது, முண்டாசுக்கவி பாரதியின் பாடல் வரிகள். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு என்ற நிலையை தகர்த்தெறிந்து, இன்று, தாங்கள் இல்லாத துறையே இல்லை எனுமளவுக்கு ஆற்றல் நிறைந்தவர்களாக மாறியிருக்கின்றனர் பெண்கள். அதுவும், போட்டி தேர்வெழுதி அரசுப் பணியை அலங்கரிப்பதில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வாயிலாக நடத்தப்பட்டு வரும் இலவச வேலை வாய்ப்பு பயிற்சி வகுப்பு வாயிலாக, பெண்கள், அரசுப்பணிக்கு செல்வது அதிகரித்து வருகிறது.
கடந்த, 2021 ஏப்., மாதம் இங்கு பயிற்சி மையம் செயல்பட துவங்கியது. ஒவ்வொரு போட்டி தேர்வின் போதும், நுாற்றுக்கும் மேற்பட்டோர் இங்கு பயிற்சி பெறுகின்றனர். அதன் விளைவாக, இதுவரை, 43 பேர் அரசுப்பணி பெற்றுள்ளனர்; இதில், 31 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான காரணம் குறித்து, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் சுரேஷ்குமார் கூறியதாவது: கொரோனாவுக்கு பின், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பலரும் வேலையிழந்தனர்; இதனால், அரசுப்பணியின் மீதான முக்கியத்துவத்தை பலரும் உணரத்துவங்கினர். தனியார் வேலைக்கு செல்வதை விட, அரசுப்பணி பாதுகாப்பானது என்பதை பெண்கள் உணர துவங்கினர்.
குடும்பத்தலைவிகள் உட்பட கல்லுாரி படிப்பு முடிக்கும் மாணவிகளுக்கும் அரசுப்பணி மீதான ஆர்வம் அதிகரிக்க துவங்கியிருக்கிறது.
டி.என்.பி.எஸ்.சி., - எஸ்.எஸ்.சி., மற்றும் வங்கித்தேர்வு என போட்டி தேர்வெழுதி, வேலை பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் தரமான பயிற்சி வழங்கப்படுவதால், அதிகளவிலான பெண்கள் பங்கேற்கின்றனர். கலெக்டரும் அவ்வப்போது, போட்டி தேர்வெழுதுவோரிடம் தனது அனுபவத்தை பகிர்ந்துக் கொள்கிறார்.
கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் பலர், அரசு வாகனத்தில் வந்திறங்கி, அவர்கள் அரசுப்பணி புரிவதை நேரில் பார்க்கின்றனர்.
இவையெல்லாம் போட்டி தேர்வெழுதுவோருக்கு ஆர்வத்தை அதிகரிக்க செய்திருக்கிறது.
ஒவ்வொரு அரசு கல்லுாரிகளுக்கும் சென்று, மாணவ, மாணவியருக்கு அரசுப்பணி, போட்டி தேர்வு குறித்த விழிப்புணர்வை ஏற் படுத்தி வருகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.