/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசின் வேளாண் காடுகள் உருவாக்கும் திட்டம்; விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு
/
அரசின் வேளாண் காடுகள் உருவாக்கும் திட்டம்; விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு
அரசின் வேளாண் காடுகள் உருவாக்கும் திட்டம்; விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு
அரசின் வேளாண் காடுகள் உருவாக்கும் திட்டம்; விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு
ADDED : ஆக 07, 2024 10:43 PM
உடுமலை : குடிமங்கலம் வட்டாரத்தில், வேளாண் காடுகள் உருவாக்கும் திட்டத்துக்கு, தேவையான மரக்கன்றுகள், வேளாண்துறையினரால் வினியோகிக்கப்பட உள்ளது. தேவைப்படும் விவசாயிகள், வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.
தமிழக அரசு, 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்', திட்டத்தின் கீழ், பல்வேறு மானியத்திட்டங்கள், வேளாண்துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில், விளைநிலங்களில், தொடர்ச்சியாக ஒரே வகையான சாகுபடியை மேற்கொள்வது உள்ளிட்ட காரணங்களால் மண் வளம் குறைகிறது.
மேலும், உற்பத்தியை அதிகரிக்க அதிகளவில் ரசாயனங்கள், களை, பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால், மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து, மண் வளமும், நலமும் குறைந்துள்ளது. விளைநிலங்களில், களர், உவர் அமிலத்தன்மை அதிகரித்து விட்டது.
இதை மேம்படுத்த, அரசின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்,' திட்டத்தில், வேளாண்துறை வாயிலாக பல்வேறு மானியங்கள் வழங்கப்படுகிறது.
இது குறித்து குடிமங்கலம் வட்டார வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது: மண் வளத்தை மேம்படுத்த, அரசின் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வட்டாரத்திலுள்ள விவசாயிகளுக்கு, 34 மண்புழு உரத்தொட்டி வழங்கப்பட உள்ளது.
வேப்பமரக்கன்று நடுதலை ஊக்குவிக்க, 2,800 நாற்றுகளும், ஆடாதொடா, நொச்சி நாற்றுகள், 15 ஆயிரம், வேளாண் காடுகள் உருவாக்க, 13,500 மரக்கன்றுகளும் வினியோகிக்கப்பட உள்ளது.
மேலும், மண் பரிசோதனை செய்து, மண்ணின் தன்மை குறித்த விபரங்களை உள்ளடக்கிய மண் வள அட்டை, 660 பேருக்கு வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள், 'உழவர்' செயலி வாயிலாக பதிவு செய்ய வேண்டும். மேலும், விபரங்களுக்கு, தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்களையோ, வட்டார வேளாண் விரிவாக்க மையத்தையோ அணுகலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.