/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மானிய திட்டங்கள் ஏராளமாக இருக்குங்க! பயன்படுத்த விவசாயிகளுக்கு அழைப்பு
/
மானிய திட்டங்கள் ஏராளமாக இருக்குங்க! பயன்படுத்த விவசாயிகளுக்கு அழைப்பு
மானிய திட்டங்கள் ஏராளமாக இருக்குங்க! பயன்படுத்த விவசாயிகளுக்கு அழைப்பு
மானிய திட்டங்கள் ஏராளமாக இருக்குங்க! பயன்படுத்த விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : மே 23, 2024 11:25 PM
உடுமலை;நடப்பு சீசனில், சிறுதானிய விதைப்பு உள்ளிட்ட சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் குடிமங்கலம் வட்டார விவசாயிகள் விரிவாக்க மையத்தை அணுகலாம் என, வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குடிமங்கலம் வட்டாரத்தில், தற்போது பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதையடுத்து, விளைநிலங்களில், கோடை உழவு உள்ளிட்ட சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.
இந்நிலையில், நடப்பு சீசனுக்கான இடுபொருட்கள் மற்றும் மானியத்திட்டங்கள் குறித்து, வேளாண்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
குடிமங்கலம் வட்டார வேளாண்துறை உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது:
நடப்பாண்டு வேளாண்துறை வாயிலாக, முதல்வரின் 'மண்ணுயிர் காப்போம்', சிறுதானிய இயக்கம், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் விதை கிராம திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், மண் புழு தொட்டி (சில்பாலின்), வேம்பு நடவு, உயிர்ம வேளாண் தயாரிப்பு மையம் அமைக்க, மானியத்துடன் இடுபொருட்கள் வினியோகிக்கப்படும்.
இதனால், அங்கக வேளாண்மை ஊக்குவிக்கப்படும். சிறுதானிய இயக்கத்தில், விதை, நுண்ணுயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள், அங்கக உரம் மானியத்தில் வழங்கப்படும்.
தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், தானிய வகை மற்றும் பயறு வகை விதைகள், நுண்ணுாட்ட உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் மானியத்தில் வினியோகிக்கப்படும்.
சிறு தானிய சாகுபடியை ஊக்குவிக்க உழவு மானியம், ெஹக்டேருக்கு 2 ஆயிரம் ரூபாய் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், பொன்னேரி, பூளவாடி, வடுகபாளையம், மூங்கில்தொழுவு மற்றும் இலுப்பநகரம் கிராமங்களில், விசை தெளிப்பான் வினியோகம், வரப்பு பயிராக பயறு வகை பயிர்கள் விதைக்க பயறு வகை விதை; முட்புதர்களை அகற்றி, விளைநிலங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர, பின்னேற்பு மானியம் வழங்கப்படும்.
நுண்ணீர் பாசன திட்டத்தில், மானியத்தில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் அமைத்தல் மற்றும் தானியங்கி சொட்டு நீர் அமைப்பு நிறுவலாம். விதை கிராம திட்டத்தில், தானிய வகை மற்றும் பயறு வகை விதைகள் மானியத்தில் வழங்கப்படும்.
வேளாண்துறை வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், 'உழவர் செயலி' வாயிலாக முன்பதிவு செய்யலாம்.
மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி உதவி, துணை வேளாண் அலுவலர்கள் மற்றும் வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில், அனைத்து திட்டத்திலும், 80 சதவீத ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.