/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாம்பல் பூசணி விலை சரிவு; விவசாயிகள் பாதிப்பு
/
சாம்பல் பூசணி விலை சரிவு; விவசாயிகள் பாதிப்பு
ADDED : செப் 04, 2024 11:28 PM

உடுமலை : உடுமலை, சின்னவீரம்பட்டி, மலையாண்டிகவுண்டனுார், பெரிசனம்பட்டி, எலையமுத்துார், துங்காவி உள்ளிட்ட பகுதிகளில், சாம்பார் பூசணி எனப்படும் சாம்பல் பூசணி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு விளையும் பூசணியை, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில வியாபாரிகள், வயல்களில் நேரடியாக வந்து கொள்முதல் செய்து வருகின்றனர். உடுமலை சந்தைக்கும் தற்போது, சாம்பல் பூசணி வரத்து அதிகரித்துள்ளது.
இரு மாதத்திற்கு முன், ஒரு கிலோ சாம்பல் பூசணி, 35 முதல், 40 ரூபாய் வரை விற்றதால், அதிகளவு விவசாயிகள் சாகுபடி செய்தனர்.
தற்போது வரத்து அதிகரித்துள்ள நிலையில், விசேஷ நாட்கள் இல்லாததால், விற்பனையும் குறைந்ததால், விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. ஒரு கிலோ, 2 முதல், 5 ரூபாய் வரை மட்டுமே விற்பதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: சாம்பல் பூசணி சாகுபடிக்கு, ஏக்கருக்கு, 40 முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. சாகுபடி காலம், 90 நாட்களாகும். 70 வது நாள் முதல் அறுவடை துவங்கும். ஒரு ஏக்கருக்கு, சராசரியாக, 15 டன் மகசூல் கிடைக்கிறது. தற்போது, விலை சரிவை சந்தித்துள்ளதால், விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இவ்வாறு, தெரிவித்தனர்.