/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீர்வுகளை நோக்கி குறைகள் 'நிறைகின்றன'
/
தீர்வுகளை நோக்கி குறைகள் 'நிறைகின்றன'
ADDED : செப் 03, 2024 01:20 AM

திருப்பூர்;திருப்பூர் மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.
திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ. துணை தலைவர் கோபால கிருஷ்ணன்:
காங்கயம் - தாராபுரம் ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி வளாகத்தில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பறையில், 22 மாணவர் படிக்கின்றனர். கழிப்பிடம் தொலைவில் உள்ளதால், மிகவும் சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் ஆய்வு செய்து, வகுப்பறை அருகிலேயே கழிப்பிடம் கட்டிக் கொடுக்க வேண்டும்.
திருப்பூர் மாநகராட்சி, 18வது வார்டு பொதுமக்கள்:
குறிஞ்சி நகர், வ.உ.சி., நகர், செல்வலட்சுமி நகர், மூர்த்தி நகரில் ஏராளமான குடும்பங்கள் வசிக்கிறோம். மூர்த்திநகர் பிரதான சாலையை விரிவாக்கம் செய்து தார் ரோடு போடும் பணி துவங்கியுள்ளது. தனியார் ஒருவர் ரோடு விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளார். சாலையை அளவீடு செய்து, தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றி, உடனடியாக புதிய தார்சாலை அமைக்கும் பணிகளை துவக்க வேண்டும்.
திருமுருகன்பூண்டி நகராட்சி கவுன்சிலர் மகேஸ்வரி:
தேவராயம்பாளையத்தில் உள்ள ரோட்டில், இணைப்பு சாலை உள்ளது. பைபாஸ் ரோட்டில் வரும் வாகனங்கள், இணைப்பு சாலை அருகே வரும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பைபாஸ் ரோடு மற்றும் இணைப்பு சாலைகளில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
எஸ்.பெரியபாளையம் பொதுமக்கள்:
எஸ்.பெரியபாளையம் ஊராட்சி, குளத்துப்பாளையம் மக்கள், நஞ்சராயன் குளம் அருகே உள்ள இடத்தை மயானமாக பயன்படுத்தி வந்தோம். நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக மாற்றிவிட்டதால், மயானம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. வேறு இடம் வழங்கவேண்டும்.
பெருமாநல்லுார் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மக்கள்:
மறுவாழ்வு முகாமில் 54 குடும்பங்களில், 130 பேர் வசிக்கிறோம். எங்கள் வீடுகள் மிகவும் பழுதடைந்துவிட்டன. மழைக்காலங்களில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. அதே இடத்தில் புதிய வீடு கடிக்கொடுக்க வேண்டும்.
குப்பாண்டம்பாளையம் மக்கள் அளித்த மனு:
ஆதிதிராவிடர் காலனியில், 100 குடும்பங்கள் வசிக்கிறோம். நாங்கள் பயன்படுத்திவரும் மயானத்துக்கு செல்லும் பாதை, புதர் மண்டி மிக மோசமான நிலையில் உள்ளது. மாயன பாதையில் கான்கிரீட் ரோடு அமைத்துக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்றைய குறைகேட்பு கூட்டத்தில், பொதுமக்கள், மொத்தம் 549 மனுக்கள் அளித்தனர்.