/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மனக்கவலைக்கு மருந்து மகிழ்ச்சி மட்டும் தான்'
/
'மனக்கவலைக்கு மருந்து மகிழ்ச்சி மட்டும் தான்'
ADDED : ஜூன் 03, 2024 01:18 AM

திருப்பூர்;''மனக்கவலைக்கு மருந்து மகிழ்வது மட்டும்தான்,'' என, புலவர் ராமலிங்கம் பேசினார்.
திருப்பூர் நகைச்சுவை மன்றம் சார்பில், 141வது நிகழ்வு சிறப்பு விழா நேற்று நடந்தது. ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்த நிகழ்வுக்கு, செயலாளர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். நிர்வாகி முரளி வரவேற்றார்.
அறங்காவலர் பழனிசாமி, விகாஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி முன்னிலை வகித்தனர். பாரதி கிட்ஸ் பள்ளி தலைவர் நாச்சிமுத்து, சிறப்பு விருந்தினரை கவுரவித்தார். ஒருங்கிணைப்பாளர் நாராயணன், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
நகைச்சுவை மன்ற பொதுக்குழு உறுப்பினராக இணைந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. 'மனதை திற - மகிழ்ச்சி வரட்டும்' என்ற தலைப்பில், பேராசிரியர் வேத சுப்பையா பேசினார்.
'சிரிப்பே சிறப்பு' என்ற தலைப்பில், புலவர் ராமலிங்கம் பேசியதாவது:
படிப்பதில் மட்டுமல்ல, நன்கு படித்தவர்களின் தேசிய சிந்தனையால் வளர்ந்த மண் திருப்பூர். பல்வேறு கவலைகள் இருந்தாலும், மகிழ்வுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். மனக்கவலைக்கு மருந்து மகிழ்வது மட்டும்தான்; சோர்வுக்கு சரியான மருந்து சிரிப்பு மட்டும்தான்.
சில நேரங்களில், வார்த்தையே பலமாகவும், பலவீனமாகவும் இருக்கும்; சில நேரங்களில், சொற்கள் வெல்லும்; மற்றொரு நேரத்தில் கொல்லும். நல்ல வார்த்தைகளை பயன்படுத்தி, மற்றவர் மனதை வெல்ல வேண்டும். மனதை ஈர்ப்பதற்கான சரியான மந்திரமே சொற்கள்தான்.
புத்தகம் படிப்பது படிப்பறிவு; மனதை படிப்பது பட்டறிவு. முகத்துக்கு முகம் பார்த்து பேசாமல், 'பேஸ்புக்' மூலம் பேச வேண்டிய நிலை வந்துவிட்டது. உடல் நோய்க்கு மட்டுமல்ல, மனநோய்க்கும் சிரிப்பும், நல்ல சொற்களும் தான் சரியான மருந்தாக இருக்கும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, திருப்பூர் நகைச்சுவை மன்றம் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.