/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெப்ப அலை தாக்கம் கலெக்டர் 'அட்வைஸ்'
/
வெப்ப அலை தாக்கம் கலெக்டர் 'அட்வைஸ்'
ADDED : மே 09, 2024 04:12 AM
திருப்பூர் : வெப்ப அலை பாதிப்பிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ளவேண்டும் என, கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் போதுமான அளவு குடிநீர் பருகவேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமலிருக்க, ஓ.ஆர்.எஸ்., எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர், பழச்சாறு அருந்தலாம். தளர்வான ஆடைகளை அணியவேண்டும். குறிப்பாக, காலை, 11:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை தேவையின்றி வெளியே செல்லவேண்டும்.
கர்ப்பிணிகள், முதியோர், பச்சிளம் குழந்தைகள், நோய் பாதித்தோர் மிக கவனமாக இருக்கவேண்டும். காற்றோட்டமான பகுதிகளில் இருக்க வேண்டும். பயணங்களின்போது குடிநீர் கொண்டுசெல்ல வேண்டும். வெப்பத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள காலணி அணிய வேண்டும்; குடை எடுத்துச்செல்லவேண்டும்.
மருத்துவமனை, ஆரம்ப சுகாதாரநிலையங்கள் உள்பட பொது இடங்களில் ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்கப்படுகிறது. செயற்கை குளிர்பானங்கள், மதுபானங்கள், புகையிலை தவிர்க்க வேண்டும். வெப்ப அழுத்தம், வெப்பம் தொடர்பான நோய் பாதித்து மயக்கமடைந்து, குழப்பமான நிலையில் உள்ளோர், மருத்துவ ஆலோசனை பெற, 104 என்கிற எண்ணுக்கு அழைக்கலாம்.
இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.