/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பீட்ரூட்டில் அதிக விளைச்சல்; விவசாயிகளுக்கு 'அட்வைஸ் '
/
பீட்ரூட்டில் அதிக விளைச்சல்; விவசாயிகளுக்கு 'அட்வைஸ் '
பீட்ரூட்டில் அதிக விளைச்சல்; விவசாயிகளுக்கு 'அட்வைஸ் '
பீட்ரூட்டில் அதிக விளைச்சல்; விவசாயிகளுக்கு 'அட்வைஸ் '
ADDED : செப் 12, 2024 09:16 PM
உடுமலை : உடுமலை சுற்றுப்பகுதியில், களிமண் பரப்புள்ள விளைநிலங்களில், கிணற்றுப்பாசனத்திற்கு, பீட்ரூட் அதிகளவு பயிரிடப்படுகிறது.
இச்சாகுபடியில், அதிக விளைச்சல் பெற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து தோட்டக்கலைத்துறையினர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
அத்துறையினர் கூறியதாவது:
நடவு செய்யும், மண்ணின் கார அமில நிலை 5 முதல் 5.8 க்குள் இருந்தால், பீட்ரூட் விளைச்சல் அதிகம் கிடைக்கும்.
ஏக்கருக்கு 1.60 கிலோ விதையை 10 செமீ., இடைவெளி விட்டு, பார்களின் பக்கவாட்டில் விதைக்க வேண்டும்.
அடியுரமாக ஒரு ெஹக்டேருக்கு, 60 கிலோ தழைச்சத்து, 160 கிலோ மணிச்சத்து, 100 கிலோ சாம்பல் சத்து, இட வேண்டும். மேல் உரமாக 30ம் நாள் 60 கிலோ தழைச்சத்து இட வேண்டும்.
ஊட்டமேற்றிய தொழு உரத்தை விவசாயிகள் பயன்படுத்தலாம். ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு உத்திகளில் ஒன்றான விளக்கு பொறி வைத்து, வண்டு, புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
விதைத்த 60 நாட்களில், அறுவடைக்கு வரும் கிழங்குகளில் வட்டமான வெண்மை நிற கோடுகள் பரவும் முன் அறுவடை செய்யலாம்.
சொட்டு நீர் பாசனம் மற்றும் பாலித்தீன் 'மல்ஷிங் ஷீட்' முறை வாயிலாக களையில்லா சாகுபடி மேற்கொண்டு கூடுதல் விளைச்சல் பெறலாம். அனைத்து பயிர்களுடன் ஊடுபயிராக பீட்ரூட் பயிரிடலாம்.
இவ்வாறு, அத்துறையினர் தெரிவித்தனர்.