ADDED : ஆக 26, 2024 11:20 PM

பல்லடம்:-ஹரே கிருஷ்ணா பக்தி யோகா மையம் சார்பில், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா, பல்லடம், அருள்புரம், டி.ஆர்.ஜி., திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. யோகா மைய மேற்கு மண்டல செயலாளர் பக்தி வினோத சுவாமி மஹராஜ் பேசியதாவது:
உலகை ரட்சிக்கும் கடவுள் பெரிய மாளிகையில் பிறந்திருக்க வேண்டுமே என்று நினைப்போம். ராமனாக பிறக்கும்போது பெரிய மாளிகையில் தான் பிறந்தார். பலவித அவதாரங்களை முழு முதல் கடவுள் எடுத்துள்ளார். நரசிம்ம அவதாரத்தில் துாணில் இருந்தும், வராக அவதாரத்தில் பிரம்மாவின் மூக்கில் இருந்தும் வந்தார். எனவே, கடவுள் எப்படியும் வருவார்.
பரமாத்மா கிருஷ்ணரின் பிறந்த தினத்துக்கு மட்டுமே ஜெயந்தி என்று பெயர். கிருஷ்ணரின் அவதார சிறப்புகள் குறித்து தெரிந்து கொண்டாலே நமக்கு ஜெயம் தான். விநாயகர், முருகன், சிவன், அம்பாள் என, எத்தனையோ கடவுள் இருந்தாலும், ஆதியாக இருக்கும் பகவானிடம் இருந்துதான் மற்ற கடவுள்கள் வந்தனர். இந்த உலகில் எல்லோரும் தெரிந்து கொள்ளும் வகையில் பரம்பொருள் பிரகடனம் ஆகும் தினமே கிருஷ்ண ஜெயந்தி. பகவான் யார் என்பதை தெரிந்து கொள்வதே ஒரு முக்கியமான விஷயம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பல்வேறு பக்தி சொற்பொழிவுகள், குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், மாறுவேட போட்டிகள், ஹரி நாம சங்கீர்த்தனம் உட்பட பல நிகழ்ச்சிகள் இரவு 7:00 மணி வரை நடந்தன.
----
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவில் பேசிய ஹரே கிருஷ்ணா பக்தி யோகா மைய மேற்கு மண்டல செயலாளர் பக்தி வினோத சுவாமி மஹராஜ்.
விழாவில் 'கண்ணன் - ராதை' வேடத்தில் பங்கேற்ற குட்டீஸ்.
