/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'45 பேர் பிடிச்சா... காளை என்ன பொதுக்குழுவா': ஜல்லிக்கட்டில் கலகலப்பு வர்ணனை
/
'45 பேர் பிடிச்சா... காளை என்ன பொதுக்குழுவா': ஜல்லிக்கட்டில் கலகலப்பு வர்ணனை
'45 பேர் பிடிச்சா... காளை என்ன பொதுக்குழுவா': ஜல்லிக்கட்டில் கலகலப்பு வர்ணனை
'45 பேர் பிடிச்சா... காளை என்ன பொதுக்குழுவா': ஜல்லிக்கட்டில் கலகலப்பு வர்ணனை
ADDED : பிப் 23, 2025 02:30 AM

அலகுமலையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. அதேசமயம், ஜல்லிக்கட்டு வர்ண னையாளர் சரவணன், தனக்கே உரிய தொணியில் 'ரன்னிங் கமென்ட்ரி' கொடுத்து, கூடியிருந்தோரை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்துவிட்டார்.
காளை மற்றும் மாடு பிடி வீரர்கள் காட்டிய வீர தீரத்துக்கு ஏற்ப, நகைச்சுவை உணர்வோடு வர்ணனை செய்தார். 'கருப்பு' என்கிற முரட்டுக்காளை களமிறங்கியபோது, ' காளையின் பெயர் கருப்பு; எடுக்கப்போகுது பருப்பு; இதச் சொல்ல வேண்டியது எம் பொறுப்பு. இதக் கேட்டா உங்களுக்கு வரும் பாருங்க சிரிப்பு' என 'கமென்ட்' கொடுத்தார்.
ஒரு காளையின் திமிலை ஒன்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் பிடித்து தொங்கினர். இதைப் பார்த்த சரவணன், 'காளைய நாப்பத்தஞ்சு பேரு பிடிச்சிருக்காங்க... யாருக்கும் பிரைஸ் இல்ல… பொங்கல் வாழ்த்துகள்... போய்ட்டுவாங்க தம்பி. மாட்டுல ஒக்காந்து பேச்சுவார்த்தையா நடத்துறீங்க. மாடு என்ன பொதுக்குழுவா' என பார்வையாளர்களுக்கு சிரிப்பூட்டினார்.
தனக்கான போட்டி நேரம் முடிந்தபின் களத்திலிருந்து செல்லாத இரண்டு காளைகள், தங்களுக்குள் நேருக்குநேர் முட்டி சண்டையிட்டன. அதற்கு, 'காளைக்கும் காளைக்கும் சண்ட; ஒடையப்போவுது மண்ட' என்றார்.
செவலக்காளை ஒன்று, வீரர்களுக்கு பிடிபடாமல், ஆக்ரோஷம் காட்டியது. அருகில் செல்ல தயங்கிய வீரர்கள் இரும்பு தடுப்பில் ஏறினர். 'தம்பி காள நொறுக்குது… ஆத்தாடியாத்தா… வீரர்களே எச்சரிக்கை' என, காளையின் ஆவேசத்தையும், வீரர்களை உஷார் படுத்தியும் ஒருசேர கமென்ட் கொடுத்தார்.
ஒரு மாட்டின் பெயர் 'தக்காளி'. 'யப்பா..மாட்டின் பெயர் தக்காளி… தக்காளி வருது… முடிஞ்சா புடிச்சு ரசம் வெச்சுக்க' என்று கூற, பார்வையாளர்கள் கலகலத்தனர்.
வெளியேறிய காளை ஒன்று மீண்டும் களத்துக்குள் வந்தபோது, 'மாடு ரிட்டர்ன்டா… 'ஓசி'ல ஓட்ட போட்டுடப்போவுது… கவனம்' என, அலர்ட் கொடுத்தார். காளை வெற்றிபெற்றபோது, 'மாடு வெற்றி பெற்றது' என, தனக்கே உரிய தொணியில் கமென்ட் கொடுத்தார்.
கோவில்பட்டியை பூர்வீகமாக கொண்ட சரவணன், ஜல்லிக்கட்டு போட்டி களுக்கு 'கமென்ட்' கொடுப்பதில் கெட்டிக்காரர்; கடந்த 18 ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு வர்ணனை கொடுத்து வரும் சரவணன், 'மைக் சரவணன்' என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார். தமிழகத்தில் எங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தாலும், இவரது நகைச்சுவை கலந்த வர்ணனையை கேட்கமுடியும்.
அலகுமலையில், நெற்றியில் குங்குமப் பொட்டு, வெள்ளை வேட்டி - சட்டை அணிந்திருந்த படி, வாடிவாசலுக்கு மேல் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றிருந்தார் சரவணன். காலை முதல் மாலை வரை, 600 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காலை முதல் மாலை வரை, மேடையில் நின்றுகொண்டே அசராமல் வர்ணனை செய்துகொண்டிருந்தார்.
எந்த வேலையையும் நாம் முழு ஈடுபாட்டோடு விரும்பிச் செய்தால், உடலுக்கு களைப்போ, மனதில் சலிப்போ ஏற்படாது என்பதை, சரவணனை பார்த்த அனைவராலும் உணர முடிந்தது.