/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாயை நீங்கினால் பகவான் புலப்படுவார்
/
மாயை நீங்கினால் பகவான் புலப்படுவார்
ADDED : ஜூன் 30, 2024 12:25 AM

திருப்பூர்:''மாயை நீங்கினால், பகவான் புலப்படுவார்'' என்று ஆன்மிகத் தொடர் சொற்பொழிவில் கூறப்பட்டது.
திருப்பூர், காலேஜ் ரோட்டிலுள்ள ஸ்ரீஐயப்பன் கோவிலில், ஸ்ரீமத் பாகவத சப்தாஹ மஹோத்ஸவம் ஆன்மிக தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. 'நாரதர் சரித்திரம்' என்ற தலைப்பில், ஈரோடு பாலாஜி பாகவதர் பேசியதாவது:
இந்த உலகம் முழுவதும் வியாபித்திருப்பது ஹிந்து மதம். மதம் என்பதற்கு வழி என்று பொருள். பகவானை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் வழிதான் மதம். எல்லா மதத்தின் நோக்கமும், பகவானிடம் அழைத்துச் செல்வதாகத்தான் இருக்க வேண்டும்.
பஞ்ச பூதங்களின் சேர்க்கைதான் இந்த பிரபஞ்சம். கயிறு, இருளில் பாம்பு போல் தெரியும்.
அதுபோல், இறைவன் ஒருவன்தான். மாயையால், இறைவன் உலகமாக தெரிகிறார். ஒருவனுக்கு ஞானப்பிரகாசம் ஏற்பட்டால், மாயை நீங்கி, பகவான் புலப்படுவார்.
தெய்வத்தை நம்பாததால், தெய்வத்துக்கு ஏதும் ஆகப்போவதில்லை; மாறாக, தெய்வத்தை நம்பாதோர் அடுத்தடுத்த ஜென்மங்கள் எடுப்பர். கடைசியில் எப்படியும் இறைவனை சென்றடைந்து விடுவர்; அப்போது, 'வா' என இறைவன் அழைத்து தன்னோடு சேர்த்துக்கொள்வார்.
வேதங்கள் மூலமாகவும், மகான்கள் மூலமாகவும்தான் பகவானை நாம் அறிந்துகொள்ளமுடியும். யார் ஒருவருக்கு பாகவதம் கேட்கவேண்டும் என்கிற சங்கல்பம் தோன்றுகிறதோ, அவரது இதயத்தில் பகவான் உடனடியாக குடிகொள்கிறார்.
மென்மேலும் பாகவதம் கேட்கவேண்டும் என்ற ஆசையை உள்ளிருந்து துாண்டிவிடுவார்.
இவ்வாறு, அவர் பேசினார்.