/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகளுக்கு கெடுதல் செய்தால் அந்த பாவம் உங்களை சும்மா விடாது! அதிகாரியிடம் விவசாயிகள் ஆவேசம்!
/
விவசாயிகளுக்கு கெடுதல் செய்தால் அந்த பாவம் உங்களை சும்மா விடாது! அதிகாரியிடம் விவசாயிகள் ஆவேசம்!
விவசாயிகளுக்கு கெடுதல் செய்தால் அந்த பாவம் உங்களை சும்மா விடாது! அதிகாரியிடம் விவசாயிகள் ஆவேசம்!
விவசாயிகளுக்கு கெடுதல் செய்தால் அந்த பாவம் உங்களை சும்மா விடாது! அதிகாரியிடம் விவசாயிகள் ஆவேசம்!
ADDED : ஜூலை 02, 2024 12:28 AM

பல்லடம்:'நாங்கள் கொடுத்த மனுவெல்லாம் குப்பைக்கு போய்விட்டதா,' என, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியிடம், பல்லடம் பகுதி விவசாயிகள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.
பல்லடம் ஒன்றியம், வாவிபாளையம் ஊராட்சி குள்ளம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தொட்டிக்கரி ஆலையால், நிலத்தடி நீர் கடுமையாக மாசடிந்துள்ளதாக விவசாயிகள் தொடர்ச்சியாக புகார்கள் அளித்து வருகின்றனர். இதற்கிடையே, ஆலை இயங்க அனுமதி வழங்கியதாக கூறி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
விவசாயிகள் கூறியதாவது:
ஊராட்சி அனுமதியின்றி, ஊர் மக்கள் எதிர்ப்பை மீறி, எந்த விதிமுறையும் பின்பற்றாமல், முறையான அனுமதி பெறும் வரை ஆலையை இயக்கக் கூடாது என தாசில்தார் உத்தரவிட்ட பின்னரும், ஆலை தொடர்ந்து செயல்படுகிறது. ஒரு ஆலைக்கு எதிராக ஊரே எதிர்த்து நிற்க, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது ஏன்? நிலத்தடி நீரை நம்பித்தான் எங்களது வாழ்க்கை உள்ளது.
மாசடைந்த தண்ணீரை ஆய்வுக்கு எடுத்துச் சென்றீர்களே அது எங்கே? ஒரு ஊரையே அழிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தயாராகி வருகிறது. அனைத்து அதிகாரிகளுக்கும் பணத்தை வீசுகிறேன்; என்னை எதுவும் செய்ய முடியாது என, தாசில்தார் முன்னிலையிலேயே ஆலை உரிமையாளர் சவால் விடுகிறார்.
நாங்கள் அளித்த மனுவெல்லாம் குப்பைக்குச் சென்று விட்டதா? எங்களது வாழ்க்கையே தண்ணீரையும், விவசாயத்தையும் நம்பித்தான் உள்ளது. எங்களிடம் கருத்து கேட்காமல் அனுமதி கொடுத்தது உங்கள் தவறு. இதற்குப் பிராயச்சித்தமாக அனுமதியை ரத்து செய்து கொடுங்கள். விவசாயிகளுக்கு கெடுதல் செய்தால் அந்த பாவம் சும்மா விடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இப்பிரச்னை குறித்து, திருப்பூர் தெற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர் சரவணகுமார் கூறுகையில், 'ஆலையால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் கண்டிப்பாக அதை அனுமதிக்க முடியாது. புகார் மனு ஒன்றை கொடுங்கள். கண்டிப்பாக பிரச்னைகளை சுட்டிக்காட்டி, ஆலையின் இயக்கத்தை நிறுத்த பரிந்துரைக்கிறேன்,' என்றார்.
--------------
புட்நோட்
பல்லடத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
அனைத்து அதிகாரிகளுக்கும் பணத்தை வீசுகிறேன்; என்னை எதுவும் செய்ய முடியாது என, தாசில்தார் முன்னிலையிலேயே ஆலை உரிமையாளர் சவால் விடுகிறார்