ADDED : மே 31, 2024 01:38 AM

பல்லடம்;அரசை நம்பி பயனில்லை என்பதால், பல்லடம் அருகே ஓடையை மீட்க பொதுமக்களே களமிறங்கியுள்ளனர்.
பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட எல்லைகளில், குப்பைகள், கழிவுகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அருகிலுள்ள நீரோடையும் மாசடைந்து கழிவுகள் குப்பை நிறைந்து காணப்படுகிறது.
குப்பை கிடங்கை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், குப்பைகளை அகற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, அரசு நிர்வாகத்தை நம்பாமல், பொதுமக்களே நீரோடையை மீட்கும் பணியில் களம் இறங்கியுள்ளனர்.
ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சாய்குரு கார்டன் பகுதி பொதுமக்கள் கூறியதாவது: ஊராட்சி எல்லையில் உள்ள குப்பை கிடங்கு அகற்ற வேண்டும் என்றும், ஓடையை துார்வாரி, கழிவுநீருக்குள் செல்லும் குடிநீர் குழாயை மாற்றி அமைக்க வேண்டும் என, பலமுறை வலியுறுத்தி விட்டோம். இருப்பினும், மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் என யாருமே கண்டு கொள்வதாக தெரியவில்லை. நாங்களே சொந்த செலவில் ஓடையை துார்வாரினோம். தொடர்ச்சியாக கழிவுகள் - குப்பைகள் கொட்டப்படுவதால், ஓடையுடன், குடிநீரும் மாசடைகிறது. தொற்று பரவும் அபாயமும் உள்ளது. இனி அரசு நிர்வாகத்தை நம்பி பயனில்லை என்பதால், கழிவுகள், குப்பைகளை ஓடையில் கொட்ட வேண்டாம் என, வீடு தோறும் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அரசுத்துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய பணியை தற்போது நாங்கள் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.