/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஈர நிலங்களில் பறவைகள் அதிகரிப்பு
/
ஈர நிலங்களில் பறவைகள் அதிகரிப்பு
ADDED : மார் 13, 2025 06:51 AM
திருப்பூர்; தமிழகத்தில், ஒருங்கிணைந்த ஈர நில பறவைகள் குறித்த கணக்கெடுப்பு, கடந்த, 9ம் தேதி துவங்கியது. ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட, உடுமலை வட்டாரத்தில் உள்ள என்.மருள்பட்டி குளம், பாப்பான்குளம், செட்டியார் குளம், சின்னவீரம்பட்டி குளம், கரிசல் குளம், ஒட்டு குளம், பெரிய குளம், செங்குளம், ராயகுளம், தேன் குளம், சின்ன ஆண்டிபாளையம் குளம் மற்றும் அவிநாசி வட்டாரத்தில், சாமளாபுரம் குளம், ராமியம்பாளையம் குளம், சங்கமாங்குளம், சேவூர் குளம், செம்மாண்டம்பாளையம் குளம், தாமரைக்குளத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மேலும், திருப்பூர் வட்டத்தில், நஞ்சராயன் பறவைகள் சரணாலயம், மாணிக்காபுரம் குளம், உப்பாறு அணை உள்ளிட்ட இடங்களிலும், பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. வனத்துறை பணியாளர்கள், திருப்பூர் இயற்கை கழகம், தன்னார்வ தொண்டு நிறுவன குழுவினர் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த கணக்கெடுப்பில் புள்ளிமூக்கு வாத்து, சின்ன கீழ்க்கை சிறகி, சங்குவளை நாரை, செந்நீல நாரை, கரண்டிவாயன், கருப்பு அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, தாமரை கோழி, சின்ன பட்டாணி உப்பு கொத்தி, சின்ன கொசு உள்ளான், முக்குளிப்பான், தாழைக்கோழி, செண்பம், பனங்காடை, வெண்புருவ வாலாட்டி, மஞ்சள் வாலாட்டி, கொண்டலாத்தி, சாம்பல் சிலம்பன் உள்ளிட்ட பறவையினங்கள் தென்பட்டுள்ளன.
அத்துடன் பச்சைக்கிளி, மாங்குயில், வால் காக்கை, நீலவால் பஞ்சுருட்டான், கரிச்சான், ஊதா தேன்சிட்டு, சிறிய நீல மீன் கொத்தி, நாமக்கோழி, நீல தாழைக்கோழி, வெண் மார்பு கானாங்கோழி, மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, பொறி மண் கொத்தி, வெண் மார்பு மீன் கொத்தி, மயில், கவுதாரி, போன்ற பறவையினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது, என, வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.