/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கவாத்து செய்தால் அதிகரிக்கும் மகசூல்!
/
கவாத்து செய்தால் அதிகரிக்கும் மகசூல்!
ADDED : செப் 06, 2024 02:44 AM
உடுமலை:மா மரங்களில், கவாத்து செய்து, உர நிர்வாகத்தை முறையாக பின்பற்றினால், அதிக மகசூல் பெறலாம் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உடுமலை வட்டாரத்தில், ஜல்லிபட்டி, லிங்கம்மாவூர், குமாரபாளையம், தேவனுார்புதுார், மானுப்பட்டி, மொடக்குப்பட்டி, உடுக்கம்பாளையம் உட்பட பகுதிகளில், ஆயிரத்து 700 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில், மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மா மரங்களில், செப்., மாதத்தில், கவாத்து செய்வதால், பல்வேறு பலன்கள் கிடைக்கும் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துறையினர் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை சீசனுக்கு முன், மா சாகுபடியில் கிளை படர்வு மேலாண்மை, உர நிர்வாகம் ஆகியவற்றை முறையாக பின்பற்ற வேண்டும். பருவமழை துவங்கியதும், நிலப்போர்வையாக பசுந்தாள் உரப்பயிர்களை விதைக்கலாம்.
மரங்களின் வளரும் தருணத்தில், மிக நெருக்கமாக உள்ள மரங்களின் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். செப்., மாதத்தில் கவாத்து பணிகளை மேற்கொள்ளலாம்.
ஆரோக்கியமாக உள்ள கிளையை விட்டு விட்டு குறுக்கே நிழல் பகுதியில், வளரும் சிறு கிளைகளையும், கவாத்து செய்ய வேண்டும். மரத்தில், 5 கிளைகள் இருந்தால், 2 முதல் 3 கிளைகள் மட்டும் இருக்குமாறு கவாத்து செய்யலாம். கவாத்து வாயிலாக மரத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் கிளை படர்வு மேலாண்மையை விவசாயிகள் பின்பற்றினால், புதுக்கிளைகளில் பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் இருக்காது.
இவ்வாறு, தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.