/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அபார வெற்றியை நோக்கி தொழில்துறை முனைப்பு'
/
'அபார வெற்றியை நோக்கி தொழில்துறை முனைப்பு'
ADDED : செப் 15, 2024 01:22 AM

திருப்பூர்: தொழில்கள் முழுவதிலும் நிலைத்தன்மை என்பது, இன்றியமையாததாக மாறி இருப்பதால், ஜவுளித் துறையானது நிலையான நடைமுறையை பின்பற்ற தயாராகி வருகிறது. அத்தகைய முயற்சியை ஊக்குவிக்கவும், தொழில் வல்லுனர்களின் கருத்துக்களை பரப்பவும், சிறப்பு கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.
அதன்படி, டி.யு.வி., ரெய்ன்லேண்ட் இந்தியா நிறுவனம், திருமுருகன்பூண்டி பாப்பீஸ் ஓட்டலில், நிலையான ஜவுளித்தொழிலின் எதிர்காலம் குறித்த கருத்தரங்கை நடத்தியது. பசுமை சார் உற்பத்தி, மறுசுழற்சி மற்றும் வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியை செயல்படுத்துவது குறித்து தொழில்துறையினர் பேசினர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் இளங்கோவன் பேசுகையில், ''தற்போது கடைபிடித்து வரும் நிலையான முயற்சிகள், எதிர்பார்த்த பலனை அளிக்கும். சரியான நேரத்தில், திருப்பூரின் ஜவுளித் தொழில்துறையினரின் பசுமை சார் முயற்சி, அபார வெற்றியை கொடுக்கும். அரை நுாற்றாண்டுகால பழமையான திருப்பூர் ஜவுளி கிளஸ்டர், எதிர்காலத்தில் பெரிய சாதனை புரிய திட்டமிட்டுள்ளது,'' என்றார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பிராண்ட் கமிட்டி தலைவர் ஆனந்த், கரூர் ஜவுளி உற்பத்தியாளர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகி சங்கரலிங்கம், பிரைமார்க் நிறுவனத்தின், இந்தியா மற்றும் இலங்கைக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிலைத்தன்மை தலைவர் ஆதர்ஸ் இமானுவேல், இந்திய, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் மூத்த துணைத் தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் பேசினர்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகி வேல்முருகன் நன்றி கூறினார்.