/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென்னங்கன்று தேர்வில் கவனம் தேவை கருத்தரங்கில் தகவல்
/
தென்னங்கன்று தேர்வில் கவனம் தேவை கருத்தரங்கில் தகவல்
தென்னங்கன்று தேர்வில் கவனம் தேவை கருத்தரங்கில் தகவல்
தென்னங்கன்று தேர்வில் கவனம் தேவை கருத்தரங்கில் தகவல்
ADDED : ஜூலை 30, 2024 01:17 AM

உடுமலை;''தென்னை நீண்ட கால பயிராக இருப்பதால், தென்னங்கன்று தேர்வில், விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்,'' என தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் தவப்பிரகாஷ் பேசினார்.உடுமலையில், தோட்டக்கலைத்துறை சார்பில், ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்க திட்டத்தின் கீழ், தென்னையில் சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் பூச்சி நோய் மேலாண்மை குறித்த, மாவட்ட அளவிலான கருத்தரங்கம் நேற்று துவங்கியது.
தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சந்திரகவிதா வரவேற்றார். வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வந்த்கண்ணன் தலைமை வகித்தார்.
முன்னாள் எம்.பி., சண்முகசுந்தரம், நகராட்சித்தலைவர் மத்தீன், ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தென்னையில் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து, ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் தவப்பிரகாஷ் பேசியதாவது:
தென்னை நீண்ட கால பயிராக இருப்பதால், நாற்று தேர்வு, மண் மற்றும் நீர் வளம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். அனைத்து வகை மண்ணிலும் தென்னை வளர்ந்தாலும், கார, அமிலத்தன்மை அதிகமான நிலங்களில் பாதிப்பு அதிகமிருக்கும்.
அதே போல், நாற்று தேர்விலும் விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வேளாண் விஞ்ஞானிகள் பரிந்துரை அடிப்படையில், தங்கள் மண்ணுக்கு தகுந்த நாற்றுகளை தேர்வு செய்ய வேண்டும்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில், தென்னைக்கான தகுந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. முறையான தொழில்நுட்பங்களை பின்பற்றினால் தென்னையை லாபகரமான பயிராக பராமரிக்க முடியும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தென்னை வளர்ச்சி வாரிய செயல்பாடுகள் குறித்து, தளி தென்னை வளர்ச்சி வாரிய உதவி இயக்குனர் (பயிற்சி) ரகோத்தமன், பூச்சி மேலாண்மை குறித்து பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய இணை பேராசிரியர் சரவணன், தமிழ்நாடு வேளாண் பல்கலை., பேராசிரியர் செந்தில்வேல் உள்ளிட்ட பலர் பேசினர்.
உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கலாமணி நன்றி தெரிவித்தார். தென்னையை தாக்கும் நோய்கள் மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இன்று, (30ம் தேதி), தளி தென்னை வளர்ச்சி வாரியத்தில், தென்னையில் உயர் சாகுபடி தொழில்நுட்பங்கள் செயல்விளக்கம், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் வேளாண்மையில் ட்ரோன் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.