/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகாவிஷ்ணுவிடம் விசாரணை: அவிநாசி அலுவலகத்தில் சோதனை
/
மகாவிஷ்ணுவிடம் விசாரணை: அவிநாசி அலுவலகத்தில் சோதனை
மகாவிஷ்ணுவிடம் விசாரணை: அவிநாசி அலுவலகத்தில் சோதனை
மகாவிஷ்ணுவிடம் விசாரணை: அவிநாசி அலுவலகத்தில் சோதனை
ADDED : செப் 13, 2024 05:35 AM

திருப்பூர் : அவிநாசி அருகே ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணுவின் அலுவலகம், வீட்டில் சென்னையிலிருந்து வந்த போலீசார் சோதனை நடத்தினர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே பழங்கரை - குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு, 30. இவர் சென்னை, சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகர் அரசு பள்ளிகளில் நிகழ்த்திய ஆன்மிக சொற்பொழிவு சர்ச்சைக்குரியதாக இருந்ததாக கூறி, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, வெளிநாட்டில் இருந்து திரும்பிய அவரை சென்னை, சைதாப்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின், கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, மூன்று நாள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து மகாவிஷ்ணுவிடம் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூரில் விசாரணை
இச்சூழலில், 'கஸ்டடி' எடுக்கப்பட்ட மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சேட்டு தலைமையிலான போலீசார் திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே குளத்துப்பாளையத்தில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேனில் நேற்று காலை அழைத்து வந்தனர்.
அறக்கட்டளை அலுவலகம் மற்றும் அவர் தங்கியிருக்கும் அறை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்தனர். வெளிநாடுகளில் இருந்து பணம் வருவது தொடர்பாக கம்ப்யூட்டரில் உள்ள ஆவணங்கள் உள்ளிட்ட பலவற்றையும் போலீசார் பார்வையிட்டனர். இந்த விசாரணையின் போது, அவிநாசி இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
அவிநாசி அருகேயுள்ள அறக்கட்டளை அலுவலகத்துக்கு மகாவிஷ்ணுவை அழைத்து வந்து, விசாரணை நடந்தது. அடிக்கடி வெளிநாடு பயணம், பணப்பரிவர்த்தனை குறித்து மகாவிஷ்ணுவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கான ஆவணங்கள் குறித்தும், கம்ப்யூட்டர், லேப்டாப் ஆகியவற்றை பார்வையிட்டோம். அலுவலகம், தங்கியிருந்த அறை ஆய்வு செய்யப்பட்டது. இதுவரை எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

