/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடனடித் தீர்வு சாத்தியமா? அலுவலர்கள் மனக்குமுறல்
/
உடனடித் தீர்வு சாத்தியமா? அலுவலர்கள் மனக்குமுறல்
ADDED : செப் 17, 2024 05:11 AM
'மனுக்களுக்குத் தீர்வு கிடைப்பதில்லை; மனுக்கள் தேங்கியுள்ளன' என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத அரசுத்துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் சிலர், நம்மிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்:
சிறப்பு முகாம்கள், குறைகேட்பு கூட்டங்களில் பெறப்படும் மனுக்கள் மீது, 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும். அதன்படி, உரிய அரசுத்துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
சான்றிதழ் வழங்குவது போன்ற கோரிக்கைகள் ஒரு வாரத்துக்குள் நிறைவேற்றப்படும். வீட்டுமனை பட்டா கேட்கும் மனுக்களுக்கு அவ்வளவு எளிதாக தீர்வு காண முடிவதில்லை. அரசு நிலம் தேடி கண்டறிய வேண்டும்; தகுதியான நிலமாக இருந்தால், மனைகளாக பிரித்து, பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது; அதற்கு ஓராண்டு காலம் ஆகிவிடும்.
அடுக்குமாடி வீடு கேட்டு ஆயிரக்கணக்கான மனுக்கள் வருகின்றன; அவற்றின் மீது, உடனே நடவடிக்கை எடுக்க முடியவதில்லை. வீடு கட்டி முடித்த பிறகே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாவட்ட அதிகாரி மூலம் முடிக்கும் பிரச்னைகளுக்கு எளிதாக தீர்வு காணப்படும்.
சில மனுக்களுக்கு அரசுத்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி தீர்வு காணப்படுகிறது. சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலையில் உள்ள மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணப்படுகிறது. தனிநபர் மனுக்கள் மீது, விதிமுறைகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்கிறோம்.
வீட்டு மனை பட்டா, அடுக்குமாடி வீடு போன்ற சில மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண முடிவதில்லை. பெரும்பாலும் இவ்வகை மனுக்கள் தான் வருகின்றன. மனுவுக்கு தீர்வு காண்பது மட்டுமே பிரதான பணி இல்லை; வழக்கமான பணிகளுடன், இப்பணிகளையும் செய்கிறோம்.மனுக்களுக்கு தீர்வு காண முடியாவிட்டாலும், உரிய முறையில் பதில் அளிக்க வேண்டும் என்று, உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பொத்தாம்பொதுவாக
குறை சொல்லாதீர்கள்
''பொத்தாம்பொதுவாக அரசுத்துறை அதிகாரிகள் மீது அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்து குறை கூறுகின்றனர். அரசுத்துறைகளில் காலியிடங்கள் அதிகமாக உள்ளன. பல்வேறு அரசுத்திட்டங்கள் செயல்பாட்டில் இருந்தாலும், அதற்கு இருக்கின்ற ஊழியர்களைக்கொண்டு தான் செயல்படுத்த வேண்டியிருக்கிறது. முக்கியப் பிரச்னைகளுக்கு உடனடித்தீர்வு காணப்படுகிறது. ஆனால், வீட்டு மனைப்பட்டா கேட்டு வரும் மனுக்களுக்கு அலுவலர்கள் தரப்பில் என்ன செய்ய முடியும்? அரசுத்துறை அலுவலர்கள் தரப்பையே பொத்தாம்பொதுவாக குறை சொல்வதைத் தவிர்க்க வேண்டும்'' என்று மனம் திறக்கிறார், பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு வருவாய்த்துறை அலுவலர்.