/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதினால் மட்டும் போதுமா! மா.கம்யூ., மாநில செயலாளர் சண்முகம் பேச்சு
/
மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதினால் மட்டும் போதுமா! மா.கம்யூ., மாநில செயலாளர் சண்முகம் பேச்சு
மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதினால் மட்டும் போதுமா! மா.கம்யூ., மாநில செயலாளர் சண்முகம் பேச்சு
மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதினால் மட்டும் போதுமா! மா.கம்யூ., மாநில செயலாளர் சண்முகம் பேச்சு
ADDED : மார் 07, 2025 07:09 AM

உடுமலை : ''விவசாயிகள், மீனவர், மொழிப்பிரச்னை, ஊரக வேலை உறுதி திட்ட நிதி, கல்விக்கு நிதி என ஒவ்வொன்றுக்கும், தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் மட்டுமே எழுதுகிறார். இதனால், பயனில்லை,'' என மா.கம்யூ., மாநில செயலாளர் சண்முகம் பேசினார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில், மா.கம்யூ., கட்சி சார்பில், 24 வது அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு, சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் மதுசூதனன் தலைமை வகித்தார். மா.கம்யூ., மாநில செயலாளர் சண்முகம், 'விவசாய நெருக்கடியும், தீர்வும்' என்ற தலைப்பில் பேசியதாவது:
மற்ற தொழில்களில், உற்பத்தியாளர்கள் பொருளுக்குரிய விலை நிர்ணயிக்கின்றனர். ஆனால், விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.
மத்திய அரசு, 23 விளை பொருளுக்கு ஆதார விலை நிர்ணயித்தாலும், அதற்கான சட்டங்கள், நேரடி கொள்முதல் செய்யாததால், லாபகரமான விலை கிடைப்பதில்லை.
உற்பத்தி செலவுடன், லாபம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும், என விவசாயிகள் போராட்டத்தின் உத்தரவாத சட்டம் நிறைவேற்ற, மத்திய அரசு உறுதியளித்தும், 4 ஆண்டாகியும் அதற்கான குழு கூட அமைக்கவில்லை.
விவசாய கடன் ஒரு முறை தள்ளுபடி செய்ய மறுக்கும் அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் தள்ளுபடி செய்கிறது.
உணவு பொருள் உற்பத்தி குறைந்து, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகள், ஜி.எஸ்.டி., வரியால், விவசாயிகள், கிராமப்புற மக்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கின்றனர்.
விவசாயிகள், மீனவர், மொழிப்பிரச்னை, ஊரக வேலை உறுதி திட்ட நிதி, கல்விக்கு நிதி என ஒவ்வொன்றுக்கும், தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் மட்டுமே எழுதுகிறார். இதனால், பயனில்லை. 39 எம்.பி.,க்களை கொண்டு, பார்லிமென்டில் ரகளை செய்து, நிர்ப்பந்தம் ஏற்படுத்தினால் மட்டுமே தீர்வு கிடைக்கும். நீதிமன்றங்களில் மக்களை பாதிக்கும் பல வழக்குகளில், தமிழக அரசு சிறந்த வக்கீல்களை வைத்து, முறையாக வாதாடுவதில்லை.
இவ்வாறு, பேசினார்.
இதில், திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், மாநில குழு உறுப்பினர் காமரான், மாவட்ட செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.