ADDED : ஜூலை 10, 2026 07:11 PM
அமராவதி பாசன நீர் திருட்டு பிரச்னைக்கு ... குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் ‘குமுறல்’
உடுமலை: உடுமலையில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், அமராவதி ஆறு மற்றும் வாய்க்கால்களில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்ற வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தினர். உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
அணையிலிருந்து ஆறு மற்றும் வாய்க்கால்களில் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டாலும், சட்ட விரோத நீர் திருட்டால், பாசன பகுதிகள் கடுமையாக பாதித்து வருகின்றன.
ஆற்றின் வழியோரத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட பகுதியில் அமைந்துள்ள, 300க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள், கோழி இறைச்சி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கு, பாசன நீர் சட்ட விரோதமாக கொண்டு செல்லப்படுகிறது.
இதற்காக, அமராவதி அணை துவங்கும், ஆற்றின் வழியோரத்திலும், கடத்துார் வாய்க்கால் உள்ள பாசன கால்வாய்களிலும், குழாய்கள் அமைத்து, மின் மோட்டார்கள் அமைத்தும் பாசன நீர் திருடப்படுகிறது.
இதனால், பாசனத்திற்கு திறக்கப்படும் நீரில், பெருமளவு நீர் திருடப்படுகிறது. அதே போல், ஆறு மற்றும் கால்வாய்களுக்கு அருகில், குறைந்தளவு நிலத்தை கொள்முதல் செய்து, அதில் கிணறு அமைத்து, பல கி.மீ., துாரத்திற்கு நீர் கொண்டு செல்லப்பட்டு தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
மேலும், பாசனம் அல்லாத பகுதிகளுக்கு பல கி.மீ., துாரம் நீர் கொண்டு செல்லப்பட்டு, பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், பாசன பகுதிகள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது.
இவ்வாறு நடக்கும் சட்ட விரோதமாக நீர் திருட்டுக்கு, நீர் வளத்துறை அதிகாரிகளே சாதகமாக நடந்து வருகின்றனர்.
தாராபுரம் நகராட்சி குடிநீருக்கு ஆற்றில் நீர் திறக்கப்பட்ட நிலையில், சட்ட விரோதமாக கடத்துார் வாய்க்காலில் நீரை திறந்து, தென்னை நார் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு நீர் விற்கப்பட்டது.
நடவடிக்கை எடுக்கப்படவில்லை பல லட்சம் ரூபாய்க்கு நீர் விற்கப்பட்ட நிலையில், விவசாயிகள் போராட்டம் நடத்தியும், மாவட்ட கலெக்டர் வரை புகார் தெரிவித்தும், இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.
மாவட்ட கலெக்டர் அறிவுறுத்திய நிலையில், நீர் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது போலீசில் புகார் தெரிவிக்காமல், அதிகாரிகள் மூடி மறைக்கும் வகையில் செயல்படுகின்றனர்.
குழாய் அமைத்துள்ளது, குறித்து விவசாயிகள் புகார் தெரிவித்த நிலையில், பெயரளவிற்கு ஆய்வு நடத்தியுள்ளனர். தற்போது, மழை பொழிவு குறைந்து, அமராவதி பாசன பகுதிகளில் கடும் வறட்சி நிலவும் நிலையில், தண்ணீர் திறந்தால், 70 சதவீதம் வரை, திருடப்படும்.
எனவே, வருவாய்த்துறை, போலீசார், நீர் வளத்துறை, மின் வாரியம் என சிறப்பு குழு அமைத்து, அமராவதி ஆறு மற்றும் பாசன கால்வாய்களில் நீர் திருடுவதற்கு சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள குழாய்களை முழுமையாக அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீர் நிலைகளுக்கு, விதி மீறி அமைக்கப்பட்டுள்ள கிணறு, போர்வெல்களை அகற்றவும், மின் இணைப்புகளை துண்டிக்கவும் வேண்டும்.
நீர் திருட்டுக்கு பயன்படுத்தப்படும் தொழிற்சாலை மின் மோட்டார்களை பறிமுதல் செய்யவும், மின் துண்டிப்பு மற்றும் குற்றவாளிகள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யவும் வேண்டும்.
குப்பை கிடங்காகும் கால்வாய் அதே போல், ஆறு, ராஜவாய்க்கால்கள் மற்றும் பிரதான கால்வாய், கரையோரங்களில், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில், குப்பைக்கிடங்காக மாற்றப்பட்டுள்ளது.
தண்ணீர் வரும் போது, பிளாஸ்டிக், மது பாட்டில், துணி மற்றும் ஆபத்தான பொருட்கள் மிதந்து வருவதால், மடைகள் அடைப்பு ஏற்படுவதோடு, விவசாய நிலங்களும் பாதிக்கப்படுகிறது.
மேலும், வழியோரத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகள், வீடுகளிலிருந்து நேரடியாக நீர் நிலைகளில், கழிவு நீர் வெளியேற்றப்பட்டு, ஆறு, பாசன கால்வாயில் கலக்கிறது.
இரு மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், கால்நடைகள் மற்றும் பாசன ஆதாரமாக உள்ள அமராவதி ஆறு மற்றும் பாசன கால்வாய்களில் கழிவு நீர், கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு, பேசினர்.
