/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வறட்சி நீங்குமா மழையால் எதிர்பார்ப்பு
/
வறட்சி நீங்குமா மழையால் எதிர்பார்ப்பு
ADDED : மே 11, 2024 01:49 AM
உடுமலை;குடிமங்கலம் பகுதியில், பரவலாக கோடை மழை பெய்யத்துவங்கியுள்ளதால், வறட்சி நீங்கும் என்ற நம்பிக்கை விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக, மாநிலம் முழுவதும் கடும் வெயில் நிலவி வந்தது. மழை பெய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்திருந்தனர்.
குடிமங்கலம் ஒன்றியத்தில் பிரதானமாக உள்ள விவசாயத்துக்கு, வடகிழக்கு பருவமழையே ஆதாரமாக உள்ளது. கடந்தாண்டு, இப்பருவமழை பொழிவு இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம் சரிந்து விட்டது. தென்னை மரங்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல், கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கிராமங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்நிலையில், கடந்த இரு நாட்களாக, கோடை மழை அப்பகுதியில் பரவலாக பெய்து வருகிறது. மழை தீவிரமாக பெய்யாவிட்டாலும், சீதோஷ்ண நிலை சற்று மாறியுள்ளது.
'கோடை மழை நன்றாக பெய்தால் மட்டுமே பல ஆயிரம் ஏக்கரில் தென்னை மரங்கள் காப்பாற்றப்படும். நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து காய்கறி சாகுபடி மேற்கொள்ள முடியும்,' என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நேற்றைய காலை நிலவரப்படி பெதப்பம்பட்டியில், 10 மி.மீ., மழையளவு பதிவாகியிருந்தது. மழை தீவிரமடைந்தால் வறட்சி நீங்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.