/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இது பருவமழை நேரம்; குளம் துார்வாரவில்லை என்பது சோகம்!
/
இது பருவமழை நேரம்; குளம் துார்வாரவில்லை என்பது சோகம்!
இது பருவமழை நேரம்; குளம் துார்வாரவில்லை என்பது சோகம்!
இது பருவமழை நேரம்; குளம் துார்வாரவில்லை என்பது சோகம்!
ADDED : மே 21, 2024 12:39 AM

அவிநாசி;பருவமழை விரைவில் மும்முரம் காட்ட உள்ள நிலையிலும், அவிநாசியில் உள்ள குளங்கள் துார்வாரப்படாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
அவிநாசி, மங்கலம் ரோட்டில், 104 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாமரைக்குளமும், காந்திபுரத்தில், 240 ஏக்கர் பரப்பளவு கொண்ட சங்கமாங்குளமும் உள்ளன. இவ்விரு குளங்களுக்கும் வரும் நீர் வழித்தடங்கள் துார்வாரப்படாமல் உள்ளது.
அதனால், ஆண்டாண்டு காலமாக களைச்செடிகள் முளைத்தும், புற்கள், முள் செடிகள் என புதர்களாக காட்சியளிக்கின்றது. மேலும் கட்டடக்கழிவுகள், இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக், உள்ளிட்ட கழிவுகளை கொட்டி சென்றுள்ளதால் அவ்வப்போது பெய்யும் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஓர் இடத்தில் மழை போல குவிந்துள்ளது.
தற்போது, அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான வேலாயுதம் பாளையம், சேவூர், போத்தம்பாளையம், தத்தனுார், செம்பியநல்லுார், பழங்கரை, சுதந்திர நல்லுார், புதுப்பாளையம், தெக்கலுார் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஓரிரு வாரங்களில் ஒரு சில நாட்களாக கனமழை பெய்துள்ளது.
இதனால், ஆங்காங்கே உள்ள சிறு சிறு குட்டைகள், தடுப்பணைகளில் தண்ணீர் ஓரளவு நிரம்பி உள்ளது. அவிநாசியில் கடந்த 12ம் தேதி சூறாவளி காற்றுடன் பெய்த கனமழைக்கும், அதனபின், தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாகவும், நேற்று முன்தினம் அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 44 மி.மீ. அளவில் பெய்த கனமழை காரணமாகவும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது.
அவிநாசி வட்டார விவசாயிகள் கூறியதாவது:
தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கு ஒரு சில நாட்களே உள்ளதால் போர்க்கால அடிப்படையில் இரு குளங்களுக்கும் வரும் நீர்வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு துார்வாரப்பட வேண்டும். பல இடங்களில் நீர் வழித்தடங்களில் விதி மீறல்கள் கட்டடங்கள் மற்றும் மனைகள் போன்றவைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனை உடனடியாக அகற்ற வேண்டும்.
அவிநாசியில் அரசு சார்ந்த துறைகளான நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை, வருமான வரி துறை, வருவாய் துறை,தோட்டக்கலை, வேளாண்மை என பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்கள் உள்ளது.
பொதுப்பணித்துறை அலுவலகங்களின் அலுவலர்களை சந்திக்க வேண்டும் என்றால் திருப்பூர் அல்லது பவானிசாகர் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
அதிலும் நீர் நிலைகளில் காணப்படும் குறைகளுக்கும், அதன் சார்ந்த அலுவலர்களை சந்திப்பதற்கும் பவானிசாகர் செல்ல வேண்டி உள்ளது. எனவே, அவிநாசியில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை திறக்க உதவிட வேண்டும். அப்போது மட்டுமே விவசாயிகளின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நடவடிக்கை எடுக்கப்படும்
இது குறித்து, பொதுப்பணி துறையின் செயற்பொறியாளர் அருளழகனிடம் கேட்ட போது, ''இந்த ஆண்டிற்கான துார்வாருவதற்கு நிதிகள் இன்னும் ஒதுக்கப்படவில்லை. தற்சமயம் விவசாயிகளுடைய கோரிக்கையை நீர்வள ஆதாரத்துறை செயலருக்கு அனுப்ப உள்ளோம். அதன்பின், குளங்களுக்கு வரும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு துார்வார நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

