ADDED : ஜூன் 26, 2024 10:46 PM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒன்பது தாலுகா அலுவலகங்களிலும், வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி, கடந்த 20 ல் துவங்கி நடைபெறுகிறது. காங்கயத்தில் நேற்று, வெள்ளகோவில் பிர்காவுக்கு உட்பட்ட முத்துார், சின்னமுத்துார், ஊடையம், மங்கலப்பட்டி, வேலம்பாளையம், பூராண்டன்வலசு, ராசாத்தா வலசு, மேட்டுப்பாளையம், சேனாபதிபாளையம், வெள்ளகோவில் கிராமங்களில் வருவாய் கணக்குகளை, ஜமாபந்தி அலுவலரான கலெக்டர் கிறிஸ்துராஜ் தணிக்கை செய்தார்.
இலவச வீட்டுமனை பட்டா, ரேஷன் கார்டு, முதல்பட்டதாரி சான்று, வருமான சான்று உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக, பொதுமக்கள் மனு அளித்தனர். 11 பயனாளிகளுக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
ஜூலை 2ல் நிறைவு
திருப்பூர் வடக்கு, ஊத்துக்குளி, மடத்துக்குளம் தாலுகாக்களில், கடந்த 21ம் தேதியுடனும்; திருப்பூர் தெற்கு தாலுகாவில் 25ம் தேதியுடனும்; பல்லடம், அவிநாசி, காங்கயம் தாலுகாக்களில் நேற்றுடன் ஜமாபந்தி நிறைவடைந்தது. இன்று, தாராபுரம் தாலுகாவில், குண்டடம் பிர்காவுக்கு உட்பட்ட 16 கிராமங்கள்.
உடுமலை தாலுகாவில், பெதப்பம்பட்டி பிர்காவுக்கு உட்பட்ட 13 கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெறுகிறது. தாராபுரம் தாலுகாவில், பொன்னாபுரம் பிர்காவுக்கு உட்பட்ட 8 கிராமங்களுக்கு நாளையும்; சங்கராண்டாம்பாளையம் பிர்காவுக்கு உட்பட்ட 8 கிராமங்களுக்கு ஜூலை 2ம் தேதியும் ஜமாபந்தி நடத்தி முடிக்கப்படுகிறது.