/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொலைந்தது கம்மல்... தொலையவில்லை 'தங்க' மனசு!
/
தொலைந்தது கம்மல்... தொலையவில்லை 'தங்க' மனசு!
ADDED : மே 04, 2024 11:05 PM

'ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?' என்பார்கள். உலகம் புரியாத பால்ய வயதில் கற்றுக் கொள்ளும் பல நற்பண்புகள் தான், வளர்ந்து, பெரியவர்களான பிறகும் கூட, அவர்களை சிறந்த குணவான்களாக சமுதாயத்தில் அடையாளம் காட்டுகிறது.
குழந்தைகளுக்கு நற்பண்புகளை கற்றுத்தருவதில் பெற்றோருக்கு அடுத்தப்படியாக, பள்ளி வகுப்பறைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. நற்பண்புகளை கற்றுத்தருவதற்கென்றே, நீதிபோதனை வகுப்புகளும் நடத்தப்பட்டன.
வகுப்பறையில் கல்வி பயிலும் பிள்ளைகள் மட்டுமின்றி, மைதானங்களில் விளையாட்டு பயிற்சி பெறும் மாணவர்களும், ஒழுக்கம், கட்டுப்பாடு, தன்னம்பிக்கை போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், திருப்பூர் முத்தமிழ் சிலம்ப பயிற்சி மையம், தன் மாணவ, மாணவியருக்கு ஒழுக்க நெறிகளை கற்றுத் தருகிறது.
'பயிற்சியின் போது, தவறான அர்த்தம் கொண்ட, தகாத வார்த்தைகளை பேசக் கூடாது. நாம் பயன்படுத்தும் இடத்தை, நாமே இயன்றளவு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பள்ளி மைதானத்தில் பேனா, பென்சில், ரூபாய் நோட்டு, சில்லரை நாணயங்கள் கண்டெடுக்கப்படும் பட்சத்தில், அவற்றை எடுத்து, ஆசிரியர்களிடம் வழங்க வேண்டும்' என்பது போன்ற பண்புகளை கற்றுத்தந்தார், பயிற்சியாளர் கிருஷ்ணன்.
இந்த அறிவுரைகளை மனதில் நிறுத்திய குழந்தைகள், விளையாட்டுப் பயிற்சியின் போது மைதானத்தில் கிடைத்த நாணயங்களை சேகரித்து, பள்ளி ஆசிரியர்களிடம் வழங்கி, 'சபாஷ்' பெற்றனர்.
பாப்பநாயக்கன்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில், 6ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி, பயிற்சியின் போது தனது தங்க கம்மலை தவற விட, 'அய்யோ...கம்மலை தொலைச்சுட்டேன்; எங்க அப்பா, அம்மாக்கிட்ட என்ன சொல்வேன்? '' என பதறினாள்.
அவரது பதறலை பகிர்ந்துக் கொண்ட பிற மாணவ, மாணவியர், மைதானம் முழுக்க தேடினர். தன் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவி கண்ணில் அந்த கம்மல் அகப்பட,'மாஸ்டர் நான் கண்டுபிடிச்சிட்டேன்' என, உற்சாக துள்ளலுடன் ஓடி வந்து, ஒப்படைத்தாள். கூடியிருந்த மாணவியர், கரவொலி எழுப்பி, அந்த மாணவியை பாராட்டினர்.
அதே போன்று, கோல்டன் நகர், எஸ்.கே.வி., பள்ளி, புது ராமகிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பின் போது, மைதானத்தில் மர இலைகள் அதிகமாய் உதிர்ந்திருக்க, 'நம் சுற்றுப்புறத்தை நாமே சுத்தம் செய்வோம்' என்ற அறிவுரையை மனதில் நிறுத்தியிருந்த மாணவ, மாணவியர், அவற்றை சுத்தம் செய்து, தங்கள் பயிற்சியை தொடர்ந்தனர்.
கல்விச்சாலைகளும், விளையாட்டு மைதானங்களும் ஏட்டுக்கல்வியை மட்டும் கற்பிக்கும் கூடங்களாக இல்லாமல், நற்பண்புகளை வளர்க்கும் இடங்களாகவும் மாறினால், நாட்டின் வருங்கால துாண்கள், நாட்டின் நலன் விரும்பும், வளம் காக்கும் தலைவர்களாக உருவெடுப்பர்.