/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கேள்விக்கணைகளுடன் விசைத்தறியாளர்கள்
/
கேள்விக்கணைகளுடன் விசைத்தறியாளர்கள்
ADDED : ஏப் 05, 2024 10:55 PM
பல்லடம்: 'என்ன செய்தீர்கள்; என்ன செய்வீர்கள்?' என, பல்லடத்தில் இன்று நடைபெற உள்ள வேட்பாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், விசைத்தறியாளர்கள் கேள்வி எழுப்ப தயாராகி வருகின்றனர்.
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் விசைத்தறி காடா உற்பத்தி தொழில் பிரதானமாக உள்ளது. விசைத்தறி தொழில் அடுத்தகட்ட வளர்ச்சியை எட்ட, பல்வேறு கோரிக்கைகளை விசைத்தறியாளர்கள் முன்வைத்தபோதும் மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்காததால், தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது.
லோக்சபா தேர்தலில் போட்டியிடும், கோவை தொகுதி வேட்பாளர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி, பல்லடத்தில் இன்று நடக்கிறது.
திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது: விசைத்தறிகளுக்கு ரக ஒதுக்கீடு, ராணுவம், தபால் துறை, ரயில்வே உள்ளிட்டவற்றில் சீருடைகள் தயாரித்து தரும் ஆர்டர்களை விசைத்தறிக்கு வழங்க வேண்டும்.
சோலார் பேனல் அமைத்து பசுமை மின் திட்டத்தை செயல்படுத்துதல், சாதா தறிகளை நாடா இல்லா தரிகளாக மாற்றுவதற்கான மானிய உதவி, நுால் வங்கி திட்டம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
எதிர் வரும் காலத்தில், விசைத்தறி காடா உற்பத்தி தொழில் வளர்ச்சிப்பாதைக்கு செல்ல வேண்டும். இதற்கான, சிறந்த திட்டங்களை யார் முன்னெடுக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டி உள்ளது.
இன்று நடக்க உள்ள வேட்பாளர் சந்திப்பில், 'என்ன செய்தீர்கள்... என்ன செய்வீர்கள்?' என்ற கோரிக்கைகள் குறித்து கேள்வி எழுப்ப, விசைத் தறியாளர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

