/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை வாரியம்; நன்மை தரும் முதல் காரியம்
/
பின்னலாடை வாரியம்; நன்மை தரும் முதல் காரியம்
ADDED : மே 19, 2024 11:51 PM

திருப்பூர்:பின்னலாடை வர்த்தகத்தில் நிரந்தர வளர்ச்சியை உருவாக்க, தேசிய பின்னலாடை வளர்ச்சி வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புநாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சர்வதேச அளவில் போட்டிகள் அதிகரித்து வருவதால், மத்திய, மாநில அரசுகளின் நேரடிக் கண்காணிப்பும், சலுகைகளும் கிடைத்தால் மட்டுமே, ஜவுளி ஏற்றுமதியில் காலுான்றி நிற்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் துவங்கிய பிறகு, பல்வேறு வகையில், திருப்பூருக்கான ஆர்டர் வரத்து தடைபட்டது.
வியட்நாம், வங்கதேசம், சீனா போன்ற போட்டி நாடுகளில், ஜவுளி உற்பத்தியாளருக்கு அதிகப்படியான சலுகை கிடைக்கிறது. இந்திய ஜவுளித்துறை சுணக்கமான நிலையில், பழைய ஆர்டர்களை தக்கவைக்கவே சிரமப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஏற்றுமதி சரிவு
கடந்த, 2022 -23ம் ஆண்டில், பின்னலாடை ஏற்றுமதி, 64 ஆயிரத்து, 478 கோடி ரூபாய் அளவுக்கு நடந்தது. ஓவன் ஆடைகள் ஏற்றுமதி, 68 ஆயிரத்து, 265 கோடி ரூபாய்க்கு நடந்தது. கடந்த நிதியாண்டில் (2023-24), 55 ஆயிரத்து, 30 கோடி ரூபாய்க்கு பின்னலாடை ஏற்றுமதி நடந்துள்ளது. ஓவன் ஆடைகள் ஏற்றுமதி, 64 ஆயிரத்து, 613 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது.
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தத்தில், 14.65 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது; ஓவன் ஆடை ஏற்றுமதி, 5.34 சதவீதம் சரிந்தது. முந்தைய ஆண்டை காட்டிலும், கடந்த ஆண்டில் மட்டும், 13 ஆயிரத்து, 101 கோடி ரூபாய் அளவுக்கு, ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் குறைந்துள்ளது.
புதிய ஆர்டர்கள்
நீண்ட இடைவெளிக்கு பிறகு, தற்போதுதான் புதிய ஆர்டர்கள் வரத்து மீண்டும் தலைதுாக்கியுள்ளது. வர்த்தக விசாரணை சாதகமாக முடிந்து, புதிய மாற்றம் உருவாகும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது. இருப்பினும், மத்திய, மாநில அரசுகளின் நேரடி கவனிப்பு அவசியமாகியுள்ளது. தேசிய பின்னலாடை வளர்ச்சி வாரியம் அமைத்து, ஊக்குவித்தால் மட்டுமே, பின்னலாடை ஏற்றுமதியில் போட்டி நாடுகளை சமாளிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பும்அதிகரித்துள்ளது.
ஏன் தேவை?
திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை கூறியதாவது:
போட்டி நாடுகளில், தொழில்துறையினருக்கு தேவையான அனைத்து சலுகையும், உதவியும் எளிதாக கிடைக்கிறது. கடந்த சில மாதங்களாக, பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் மிகவும் சவாலாக மாறிவிட்டது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், 10 ஆண்டுகள் பின்தங்கியிருக்கிறோம்.
பின்னலாடை ஏற்றுமதி அதிகரிக்க, புதிய தொழில்நுட்ப மேம்பாடு அவசியம். அதேபோல், வங்கிகளின் உதவியும் அதிக கெடுபிடியில்லாமல் தொழில்துறைக்கு கிடைக்க வேண்டும். பின்னலாடை தொழிலுக்கு என்ன தேவை என்பதை அடிக்கடி அரசுக்கு எடுத்துரைத்து, தேவையான உதவியை பெற்றுத்தர, பின்னலாடை வளர்ச்சி வாரியம் அமைக்கப்பட வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள், பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். அனைத்து பிரிவுகளிலும், புதிய தொழில்நுட்பங்களை கண்டறிந்து அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

