/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நுாற்றாண்டை நோக்கி பின்னலாடை தொழில்; மத்திய, மாநில அரசுகள் கைகொடுக்குமா?
/
நுாற்றாண்டை நோக்கி பின்னலாடை தொழில்; மத்திய, மாநில அரசுகள் கைகொடுக்குமா?
நுாற்றாண்டை நோக்கி பின்னலாடை தொழில்; மத்திய, மாநில அரசுகள் கைகொடுக்குமா?
நுாற்றாண்டை நோக்கி பின்னலாடை தொழில்; மத்திய, மாநில அரசுகள் கைகொடுக்குமா?
ADDED : ஆக 04, 2024 05:08 AM

திருப்பூர் : ''திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையின் நுாற்றாண்டை நோக்கிய பயணம் வெற்றிகரமாக அமைய, மத்திய, மாநில அரசுகள் கைகொடுக்கவேண்டும்; தொழில் துறையினர் இணைந்து செயல்பட வேண்டும்'' என்று தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) கோரிக்கை விடுத்துள்ளது.
பல்லடம் தாலுகாவுக்கு உட்பட்ட குக்கிராமமாக இருந்த திருப்பூர், பின்னலாடை தொழில் வளர்ச்சியால், இன்று உலகமே திரும்பிப்பார்க்கும் நகராக அதீத வளர்ச்சி அடைந்துள்ளது.
கடந்த 1930களில் திருப்பூரில் அடியெடுத்துவைத்த பின்னலாடை உற்பத்தி தொழில், தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளரின் கடின உழைப்பால், நாட்டின் பின்னலாடை தலைநகராகவும், டாலர் சிட்டி என்கிற பெயருடன், நுாற்றாண்டை நோக்கி வேகமாக பயணித்துக்கொண்டிருக்கிறது.
அன்னிய செலாவணி ஈட்டித்தருவதிலும், வேலைவாய்ப்பு வழங்குவதிலும் முக்கிய பங்குவகிப்பதால், பின்னலாடை தொழிலை தங்கள் மாநிலத்தில் கால்பதிக்கச் செய்ய, பிறமாநிலங்கள் முனைப்புகாட்டிவருகின்றன.
தொழில் பூங்கா அமைத்தல், மின் கட்டண சலுகை, மானிய கடனுதவி உள்பட பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளுடன் ஜவுளி கொள்கைகளை உருவாக்கி, தெலுங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பிறமாநில அரசுகள், திருப்பூர் பின்னலாடை துறையினரை, தங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றன.
திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி தொழில், தொடர்ந்து வெற்றிகரமாக பயணிக்க, மத்திய, மாநில அரசுகள் கைகொடுக்கவேண்டும் என தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூரின் தாய் சங்கமான தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க(சைமா) தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:
உலகளாவிய நாடுகளின், வெவ்வேறு விதமான பின்னலாடை தேவைகளையும் ஒரே இடத்தில் தயாரித்து, சவாலான பணியை திறம்பட மேற்கொண்டுவருகிறது, திருப்பூர். ஆடை தயாரிப்பின் முழு கட்டமைப்புகளை கொண்டுள்ளது.
ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உள்நாட்டு வர்த்தகம்; 30 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி வர்த்தகம் என, 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பின்னலாடை வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சாதனை ஒருநாளில், தனியொரு நபரால் நிகழ்ந்தது அல்ல; தொழில்முனைவோர், தொழிலாளரின் கூட்டு முயற்சியில், கடந்த 1930ம் ஆண்டு முதலான நீண்ட வரலாறு கொண்டது திருப்பூர் பின்னலாடை தொழிலின் வெற்றிப் பயணம்.
தொழில் வளர்ச்சிக்காக, தொழில்முனைவோர் பலரது தியாகம், தொழிலுக்கு உறுதியான அஸ்திவாரமிட்டுள்ளது. பிற மாநில அரசுகள், சலுகைகளை காட்டி, திருப்பூரின் பின்னலாடை தொழில் அஸ்திவாரத்தை நகர்த்திச்செல்ல முயற்சித்துவருகின்றன.
பின்னலாடை உற்பத்தி துறையினர், வேறு மாநிலங்களுக்கு தொழிலை கொண்டுசென்றாலும், திருப்பூரைச் சார்ந்து மட்டுமே, ஆடை தயாரிப்பை முழுமை பெறச்செய்யமுடியும். தொழில் பரவலாக்கம் என்பது வளர்ச்சி போன்ற ஒரு பிம்பமே தவிர, மகிழ்ச்சி கொள்ளத்தக்கது அல்ல. மத்திய, மாநில அரசுகள், இனியேனும் தொழில் துறையினரின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து உதவிக்கரம் நீட்டவேண்டும். திருப்பூர் தொழில்முனைவோர் அனைவரும் இணைந்து, பின்னலாடை உற்பத்தி தொழிலின் நுாற்றாண்டு பெருமையை காக்க உறுதிகொள்ள வேண்டும்.