/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கசியும் குடிநீர் - எரியாத தெருவிளக்கு - கரடுமுரடான சாலை மாநகராட்சி கூட்டத்தில் புகார்களை அடுக்கிய கவுன்சிலர்கள்
/
கசியும் குடிநீர் - எரியாத தெருவிளக்கு - கரடுமுரடான சாலை மாநகராட்சி கூட்டத்தில் புகார்களை அடுக்கிய கவுன்சிலர்கள்
கசியும் குடிநீர் - எரியாத தெருவிளக்கு - கரடுமுரடான சாலை மாநகராட்சி கூட்டத்தில் புகார்களை அடுக்கிய கவுன்சிலர்கள்
கசியும் குடிநீர் - எரியாத தெருவிளக்கு - கரடுமுரடான சாலை மாநகராட்சி கூட்டத்தில் புகார்களை அடுக்கிய கவுன்சிலர்கள்
ADDED : ஆக 01, 2024 01:35 AM

திருப்பூர் : குடிநீர், தெருவிளக்கு பிரச்னையில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக, மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரியாக குற்றம்சாட்டினர்.
திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மேயர் தினேஷ்குமார் தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் பவன்குமார் முன்னிலை வகித்தனர்.
மேயர் தினேஷ்குமார்: கடந்த கூட்டத்துக்கு பின், 30 நாளில், 275 ரோடுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள ரோடுகள் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. தொடர் கண்காணிப்பால், மழை காலங்களுக்கு முன்னதாக, பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விடுபட்ட பகுதிகளில் நான்காம் குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருகிறது.
அதுவும் முடியும் தருவாயில் உள்ளது. குடிநீர் கசிவு தொடர்பான தொடர் புகார்களையடுத்து, 2,800 குடிநீர் கசிவு கண்டறியப்பட்டு, சீரமைக்கும் பணி நடக்கிறது. தெருவிளக்கு பராமரிக்க, கூடுதல் பொறுப்பாக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். 4,053 தெருவிளக்கு மாற்றப்பட்டுள்ளது. 2,072 தெருவிளக்கு புதிதாக பொருத்தப்பட்டுள்ளது.
குப்பை எடுப்பது போன்ற பணிகளுக்கு புதிய பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. அனைத்து வார்டுகளில் குடிநீர் தாமதம் ஏன்?, என்ன பிரச்னை என்பதை கண்காணித்து, ஐந்து நாள் இடைவெளியில் வினியோகம் செய்யப்பட்டு தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சில பகுதிகளில் குடிநீர் பணிகள் நடப்பதால் காலதாமதம் ஏற்படுகிறது. அடுத்த கோடை காலத்துக்குள் சீரமைக்கப்படும்.
கமிஷனர் பவன்குமார்: குடிநீர் வினியோகத்தை கண்காணிக்கும் முறை திருப்பூரில் தான் முதன்முறையாக கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், எந்தெந்த பகுதியில், எப்போது குடிநீர் வினியோகம் போன்ற அனைத்து தரவுகளை சேகரிக்கும் வகையில் உள்ளது.
மேயர், கமிஷனர் பேசியதை தொடர்ந்து, தீர்மானங்கள் மன்றத்தில் வாசிக்கப்பட்டது. வைக்கப்பட்ட சில தீர்மானங்கள் குறித்து கவுன்சிலர்கள் ஆட்சபேனை தெரிவித்தும், விளக்கம் கேட்டு கவுன்சிலர்கள் பேசினர்.
கவிதா (தி.மு.க., ): எங்கள் பகுதியில் ஜெயலலிதா நகர் முதல் வேலவன் நகர், ஜீவா நகர் போன்ற பகுதியில் குடிநீர், பாதாள சாக்கடை போன்ற பணிகள் முழுமையடையாமல் அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இதுதொடர்பாக, கேட்டால் சரியான பதிலில்லை.
லோகநாயகி (தி.மு.க.,): பிரதான ரோடுகளில் தெருவிளக்கு எரிவதில்லை. இரு வாரங்களுக்கு மேலாக இப்பிரச்னை உள்ளது. புகார் செய்தும், இதுவரை சரி செய்யப்படவில்லை.
ரவிச்சந்திரன் (இ.கம்யூ.,): முருங்கப்பாளையத்தில், 50 ஆண்டுகள் பழைய அரசு குடியிருப்பு தற்போது பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. மழைக்காலம் என்பதால், விபத்து ஏற்படும் முன், தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தெருவிளக்கு, குடிநீர் சரமாரியாக புகார்
தொடர்ந்து, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி (அ.தி.மு.க., ), கம்யூ., கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், செல்வராஜ், முத்துகிருஷ்ணன் (தி.மு.க.,), செந்தில்குமார் (காங்.,) உள்ளிட்ட சில கவுன்சிலர்கள் சாலை, தெருவிளக்கு, குடிநீர் தொடர்பான பிரச்னை குறித்து பேசினர்.
அதில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பல தெருவிளக்கின் நிலைமை படுமோசமாக உள்ளது. இதுதொடர்பாக கேட்டால், சரியான பதில் இல்லை. மாதக்கணக்கில் சரி செய்யாமல் உள்ளதால், மக்கள் சிரமப்படுகின்றனர்.
இதற்காக நியமிக்கப்பட்டுள்ள நபருக்கு, உதவியாக கூடுதலான நபர்களை மண்டலம் வாரியாக நியமித்து, பிரச்னைகளை களைய வேண்டும். மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. பராமரிக்க கூடிய ஒப்பந்த நிறுவன பணியாளர்களை அழைத்து பேசினாலும் கண்டு கொள்வதில்லை. குடிநீர் கசிவு பிரச்னை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. இதனால், குடிநீர் வீணாகி வருகிறது என்று சராமரியான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
இதற்கு மேயர் பதிலளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரியை கேட்டார். ஆனால் அவர் பதிலளிக்க முடியாமல் தடுமாறினார். தொடர்ந்து, தெருவிளக்கு பராமரிப்பில் உள்ள அந்நிறுவனத்தின் ஒப்பந்தம் முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் பிரச்னை களையப்படும் என்று சமாளித்தார்.
வெட்டி விட்டு ஜெயிலுக்கு போறேன்...
மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி பேசியதாவது:
எனது வார்டில் குடிநீர் கசிவு தொடர்பாக மக்கள் புகார் தெரிவித்தனர். நேரில் சென்று பார்வையிட்டு, 'டேப் இன்ஸ்பெக்டரை' அழைத்து மக்களின் புகார் குறித்து தெரிவித்தேன். அதற்கு, அவர் அலட்சியமாக பதில் அளிக்கிறார். அதுமட்டுமல்லாமல், குடிநீர் கசிவுக்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. இதை பராமரிக்க கூடிய தனியார் ஒப்பந்த நிறுவனம் தான் சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அவரை வெட்டி விட்டு ஜெயிலுக்கு போறேன் என்று, மக்கள் மத்தியில் ஒரு அதிகாரி இவ்வாறு அலட்சியமாக பதில் கூறுகிறார். இது என்ன பேச்சு? இது தான் அதிகாரிகளுக்கு அழகா?
இவ்வாறு அவர் பேசினார்.