/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீரத்தால் விளைந்த விடுதலை விண்ணதிர வெளிப்படுத்துவோம்
/
வீரத்தால் விளைந்த விடுதலை விண்ணதிர வெளிப்படுத்துவோம்
வீரத்தால் விளைந்த விடுதலை விண்ணதிர வெளிப்படுத்துவோம்
வீரத்தால் விளைந்த விடுதலை விண்ணதிர வெளிப்படுத்துவோம்
ADDED : ஆக 14, 2024 11:23 PM

திருப்பூர் : நாட்டின், 78வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை சார்பில், சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில், சுதந்திரதின விழா கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடக்கின்றன.
இன்று, காலை, 9:05 மணிக்கு, கலெக்டர் கிறிஸ்துராஜ் தேசியக்கொடி ஏற்றுகிறார். சமாதானப்புறாவும், மூவர்ண பலுான்களும் வானில் பறக்கவிடப்படும். போலீஸ், தீயணைப்பு, பேண்டு வாத்தியக்குழு, மாவட்ட ஊர்க்காவல் படை, டிராபிக் வார்டன், என்.சி.சி., மாணவர் குழுவினர், மிடுக்கான அணிவகுப்பு நடத்தி, கொடிக்கு மரியாதை செலுத்துகின்றனர்.
சுதந்திர போராட்டதியாகிகளின் குடும்பத்தினர் கவுரவிக்கப்படுகின்றனர்; சிறப்பாக பணிபுரியும் போலீசாருக்கு பதக்கம் மற்றும் சிறந்த அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
சுதந்திர தின மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளி மாணவ, மாணவியரின் ஆடல் பாடலுடன் கூடிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் தலைமையிலான வருவாய்த்துறையினர் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
போலீஸ் எஸ்.பி., அபிஷேக் குப்தா மற்றும் வருவாய்த்துறை, அனைத்து அரசு துறை அலுவலர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்கின்றனர். சுதந்திர தின பாதுகாப்பு பணிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுகின்றனர்.
கலை நிகழ்ச்சி ஒத்திகை
சுதந்திர தின விழா நடைபெறும் சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில், மேடை அமைத்தல், அலங்காரம், மைக்செட் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நேற்று காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்றன. மிக நேர்த்தியாக நடைபோட ஏதுவாக, போலீசார், ஊர்க்காவல் படை, என்.சி.சி., மாணவர்கள், பேண்டு வாத்திய குழுவினர், விழா நடைபெறும் கல்லுாரி மைதானத்தில், நேற்று காலை அணிவகுப்பு நடத்தி ஒத்திகை பார்த்து, சரி செய்தனர். பள்ளி மாணவர்களும், சிலம்பம் சுற்றியும், மைதானத்தில் நடனமாடியும் தயாராகினர்.