/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நொய்யலில் கழிவுகளை கலக்கும் உள்ளாட்சிகள்'
/
'நொய்யலில் கழிவுகளை கலக்கும் உள்ளாட்சிகள்'
ADDED : செப் 15, 2024 01:33 AM

பல்லடம்: அற்புதமான நதி ஒன்று தனது அடையாளத்தை இழந்து வருவதாக, நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.
கோவை மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி, பேரூர், குனியமுத்துார், வெள்ளலுார், இருகூர், சூலுார், சாமளாபுரம், மங்கலம், திருப்பூர், ஒரத்துப்பாளையம் மற்றும் கரூர் வரை 180 கிலோ மீட்டர் பயணிக்கும் நொய்யல் நதி, காவிரி ஆற்றுடன் இணைகிறது. இதன் வழித்தடத்தில் 30க்கும் மேற்பட்ட தடுப்பணைகள், 40க்கும் அதிகமான குளம் குட்டைகள் உள்ளன.
நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தம் கூறியதாவது:
கோவை -- கரூர் வரை செல்லும் நொய்யல் ஆற்றின் சீரழிவுகளை எடுத்துக் கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றுப் படுகையில் உள்ள பாசன நிலங்களுக்கு நீர் ஆதாரமாகும், கால்நடைகள், தொழில் நிறுவனங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதாகவும் நொய்யல் நதி அமைந்துள்ளது.
நொய்யல் மிகவும் மாசடைந்துள்ளதால், நொய்யலை ஒட்டியுள்ள விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக பாதிப்புகள் மிகக் கடுமையாகி வருகின்றன. உள்ளாட்சி அமைப்புகள், நொய்யலை காப்பதில் எள்ளளவும் கவலை கொள்வதில்லை.
மாவட்ட நிர்வாகத்தில் துவங்கி, மத்திய - மாநில அரசுகளிடமும் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்துள்ளோம். நொய்யலில் கழிவுகளை கலக்கும் உள்ளாட்சி நிர்வாகங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை சிந்தித்து செயல்பட வேண்டும். மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள், தொழில் துறையினர், தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து, அடையாளத்தை இழந்து வரும் அற்புத நதியான நொய்யலை மீட்டெடுக்க வேண்டும். எதிர்வரும் தலைமுறைக்கு, நல்லதொரு சூழலை ஏற்படுத்த, உடனடியாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.