/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுயம்புவாக தோன்றிய மாகாளியம்மன்!
/
சுயம்புவாக தோன்றிய மாகாளியம்மன்!
ADDED : ஆக 08, 2024 11:03 PM
திருப்பூர், அவிநாசி ரோட்டில், காந்தி நகர் பஸ் ஸ்டாப் பகுதியிலிருந்து, 200 மீ., தொலைவில் அமைந்துள்ளது ஜீவா காலனி. திருப்பூர் நகரின் பிரபலமான ஆஷர் மில்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இடத்தில் மாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.
ஏறத்தாழ, 60 ஆண்டுக்கு முன்னர் அங்குள்ள ஒரு மரத்தின் கீழ் சுயம்புவாக எழுந்தருளிய மாகாளியம்மனுக்கு அப்பகுதியினர் முயற்சி செய்து கோவில் அமைத்தனர். அப்பகுதியினரின் ஆன்மிக தேடலுக்கு உதவும் வகையில் இதற்கான இடத்தை ஆஷர் மில் நிர்வாகம் வழங்கியது.
அந்த இடத்தில் விநாயகருக்கு சிலை அமைத்து இக்கோவில் அமைக்கும் பணி துவங்கியது. பல்வேறு தரப்பினர் முயற்சியாலும் அம்மனின் அருளாலும் திருப்பணி நிறைவடைந்து சுயம்பு அம்மன் அமைந்துள்ள சன்னதியில் மூலவராக தற்போதுள்ள மாகாளியம்மன் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடந்து வருகிறது.
பெரும்பாலும் அம்மன் கோவில்கள் வடக்கு திசை நோக்கியபடி அமைந்திருக்கும். இங்கு மாகாளியம்மன் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கிறார். சாந்த சொரூபியாக மாகாளியம்மன் அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலின் ஸ்தல விருட்சமாக வில்வ மரமும் நாகலிங்க மரமும் அமைந்துள்ளது. இவ்வளாகத்தில் கன்னி மூல கணபதி சன்னதியும், தனியாக ஒரு சன்னதியில் ஞான விநாயகரும் அமைந்துள்ளனர். அரச மரத்தடியிலும் விநாயகர் அமர்ந்து அருள் பாலிக்கிறார். அருகிலேயே பாலமுருகன் சன்னதி அமைந்துள்ளது. அதே போல், கல்யாண சுப்ரமணியர் வள்ளி தெய்வானை சமேதராக எழுந்தருளியுள்ளார்.
இக்கோவில் வளாகத்தில் தனி சன்னதியில் எம்பெருமான் சர்வேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இவர்களுடன், நவக்கிரகம் சன்னதியும், கால பைரவர் துாணில் செதுக்கிய சிற்பமாகவும் அமைந்துள்ளது.தற்போது ஆனந்த வெங்கடேசப் பெருமாளுக்கும் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் ஐந்தரை அடி உயரத்தில் அமைந்து பக்தர்களை காத்து ரட்சிக்கிறார்.
மாதந்தோறும் ஏகாதசி நாளில், விஷ்ணு சகஸ்ரநாமம் பாடி பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடத்தி அன்னதானம் நடைபெறுகிறது. மேலும் நோய்கள் தீர்க்கும் ஆஞ்சநேயர், சஞ்சீவி மலையை ஏந்தியபடி உள்ள சன்னதி, ஸ்தல விருட்சங்களுக்கு அருகே அமைந்துள்ளது.
கோவில் குருக்கள் நாகராஜ சிவம் கூறியதாவது:
இக்கோவில் காலை 6:00 - 10:30 மணி, மாலை 6:00 - 8:00 மணி வரையும் நடை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் அதற்கேற்ப நடை திறக்கப்பட்டு தரிசனம் செய்யலாம். அம்மனுக்கு பவுர்ணமி, அமாவாசை நாட்கள், ஆடி மாதம் அனைத்து வெள்ளிக் கிழமை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பிரதோஷம், கிருத்திகை, சஷ்டி, சங்கடஹர சதுர்த்தி உள்ளிட்ட நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில், சிவ துர்க்கைக்கு வழிபாடு; தேய் பிறை அஷ்டமியில் கால பைரவர் சிறப்பு வழிபாடும் சிறப்பாக நடைபெறும். அம்மன் சுயம்புவாக தோன்றிய மரத்தின் அருகே தற்போது கருப்பசாமி, கன்னிமார் சன்னதிகளும், முனீஸ்வரன், குதிரையும் அமைந்துள்ளது. ஆடி மாதம், 5 நாள் பொங்கல் பூச்சாட்டு பண்டிகை சிறப்பாக நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.