ADDED : ஜூன் 17, 2024 12:17 AM

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாநகராட்சி எல்லை விரிவுபடுத்தப்பட்ட நிலையில், பாதாள சாக்கடை திட்டம் மற்ற பகுதிகளுக்கு கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால், 'அம்ரூத்' திட்டத்தின் கீழ், விடுபட்ட பகுதிகளில் இத்திட்டப்பணி பணிகள் நிறைவு பெற்றது. இதுதவிர, வீடுகளில் குழாய் இணைப்பு வழங்கும் பணி ஆங்காங்கே நடந்து வருகிறது. இதில் வீடுகளிலிருந்து வழங்கும் குழாய் இணைப்புகள் ஆழம் குறைவாக அமைக்கப்படுகிறது என புகார் எழுந்துள்ளது. பல ஆண்டு முன் கட்டிய பல வீடுகள், சாலை உயர்த்தப்பட்டதால், தற்போது தாழ்வாக மாறி விட்டது.
மாநகராட்சி பொறியியல் பிரிவினர் கூறியதாவது:
பாதாள சாக்கடை கழிவு நீர் சேகரிக்கும் பிரதான குழாய்கள், பகுதிவாரியாக ஈர்ப்பு விசைக்கேற்ப அமைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், குடியிருப்பு பகுதிகளில் இது, 3.6 அடி ஆழத்தில் அமைத்து, இணைப்பு குழாய்கள், 2.6 அடி ஆழத்தில் அமைக்கப்படுகிறது. இதனை விட ஆழமாக அமைக்கும் போது, பிரதான குழாயில் அடைப்பு ஏற்பட்டால், இணைப்பு குழாய்களில் கழிவுநீர் எதிர் திசையில் திரும்பி விடும். இது குறித்து வீட்டு உரிமையாளர்களிடம் விளக்கமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் தாழ்வாக உள்ள இடங்களில் அதற்கேற்ப இணைப்பு குழாய் பொருத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.