ADDED : செப் 01, 2024 11:38 PM

பல்லடம்:கால்நடை விவசாயிகள் மூலம் சேகரித்து எடுத்துச் செல்லப்படும் பால், ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படுகின்றன.
இவ்வாறு, கொள்முதல் செய்யப்படும் பால், பதப்படுத்த வேண்டி குளிரூட்டும் நிலையத்துக்கு எடுத்து செல்லப்பட்டு பரிசோதிக்கப்படுகின்றன. இதன் அளவீடுகள் மேனுவலாக பதிவிடப்படுவதால், சொசைட்டிக்கு இழப்பு ஏற்படுவதாக கால்நடை விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: ஆவின் மற்றும் தனியார் சொசைட்டிகளில் பால் கொள்முதல் செய்யப்படும்போது, பாலின் தரம், சத்து, கொழுப்பு உள்ளிட்டவை அடங்கிய விவரங்கள் 'அனலைசர்' இயந்திரம் மூலம் உடனடியாக பிரின்ட் எடுக்கப்படுகிறது.
ஆனால், சொசைட்டியில் இருந்து பால் குளிரூட்டும் நிலையத்துக்கு செல்லும் பால், அங்கும் பரிசோதிக்கப்படுகிறது. ஆனால், பரிசோதனை விவரங்களை பிரின்ட் எடுக்காமல், மேனுவலாக பதிவிடுகின்றனர்.
இதில், சொசைட்டிக்கும், பால் குளிரூட்டு நிலைய பதிவுக்கும் இடையே வேறுபாடு உள்ளது. இதனால், ஆவினுக்கு நஷ்டம் ஏற்படுவதுடன், சொசைட்டிக்கு கிடைக்கும் லாப பணத்தை தீபாவளி நேரத்தில் விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுப்பதிலும் இழப்பு ஏற்படுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான ஆவின் குளிரூட்டு நிலையங்களில், நவீன 'அனலைசர்' இயந்திரம் பயன்படுத்தப்படாமல், மேனுவல் முறையில்தான் அளவீடுகள் பதிவு செய்யப்படுகின்றன. இது முறைகேட்டுக்கும் வழிவகுக்கிறது.
அனைத்து ஆவின் சொசைட்டி மற்றும் குளிரூட்டு நிலையங்களிலும், நவீன 'அனலைசர்' இயந்திரங்களை நிறுவி முறைகேடுகளை தடுக்க தமிழக அரசு ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.