/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி மின் கோட்டத்தில் மங்கலம், வஞ்சிபாளையம்
/
அவிநாசி மின் கோட்டத்தில் மங்கலம், வஞ்சிபாளையம்
ADDED : ஜூன் 25, 2024 12:44 AM
திருப்பூர்;கோவை மாவட்டத்தில், சோமனுார் கோட்டத்தில் இருந்த மங்கலம், வஞ்சிபாளையம் பகுதிகள், அவிநாசி மின்கோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டம், 2009ல் துவங்கப்பட்ட போது, குன்னத்துார், ஊத்துக்குளியின் சில பகுதிகள் ஈரோடு மாவட்டம், பெருந்துறை மின் கோட்டத்துடனும், தெக்கலுார், சாமளாபுரம், மங்கலம், வஞ்சிபாளையம் பகுதிகள் கோவை மாவட்டம், சோமனுார் மின் கோட்டத்துடனும் இருந்தன.
பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, பெருந்துறை கோட்டத்தில் இருந்த பகுதிகளை பிரித்து, ஊத்துக்குளி மின் கோட்டம் சமீபத்தில் உருவாக்கப்பட்டது.
தற்போது, கோவை மாவட்டத்தில் இருந்த, மங்கலம், சாமளாபுரம், வஞ்சிபாளையம், பூமலுார் உள்ளிட்ட மங்கலம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு உட்பட்டிருந்த பகுதிகள் திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. தெக்கலுார், மங்கலம், வஞ்சிபாளையம், மின்வாரிய அலுவலகங்கள், அவிநாசி கோட்டத்தில், அவிநாசி உபகோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. பூமலுார் உள்ளிட்ட சில அலுவலகங்கள் வீரபாண்டியுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், மங்கலம் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
இதனால் மங்கலம், சாமளாபுரம், வஞ்சிபாளையம், பூமலுார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மின்நுகர்வோர், உதவி செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு அவிநாசி செல்ல வேண்டியிருக்கும். மற்றவர்கள் பல்லடம் சென்றுவர வேண்டியிருக்கும்.
மின்நுகர்வோர் கூறுகையில், ''சோமனுார் செல்வதற்கு பதிலாக அவிநாசியும், நிர்வாக பொறியாளரை சந்திக்க கோவைக்கு பதிலாக, திருப்பூரும் செல்லலாம்'' என்றனர்.
மீண்டும் மங்கலம் உபகோட்டத்தை தோற்றுவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.