ADDED : ஆக 06, 2024 06:38 AM

''கலெக்டர் ஆபீஸ்ல போயி மனு கொடுத்துட்டு வந்தா, வீட்டு மனை கிடைச்சிரும்னு சொல்றாங்கோ...''
''ஆமாங்க்கா... என்னையும் கூப்பிட்டு இருக்காங்கோ... நீங்களும் வாரீங்களா...''
''நம்ம ஊர்ல பாதி சனங்க வேலையெல்லாம் வுட்டுப்போட்டு, மனு கொடுக்கத்தான் போறாங்கோ... நாமளும் போகாம இருக்கக்கூடாதுல்லோ...''
''நல்லா சொன்னீங்கக்கா, நம்மள கூட்டீட்டுப் போற கட்சிக்காரரைப் பார்த்தா கலெக்டரே கீழே இறங்கிவந்துருவாருங்களாமா...''
''ஆமாமா... வூட்டுக்குள்ள சோறும், பருப்பும் கெளறீட்டு, கிடைக்கிற வேலைக்குப் போயிட்டு வர்ற நமக்கு என்ன தெரியும் சொல்லு... வெள்ளையும் சொள்ளையுமா நாலும் தெரிஞ்ச மனுஷனோட போனாதான் நம்மள மதிக்கிறாங்கோ...''
''நீங்க சொல்றது நுாத்துல ஒரு பழமை''
இப்படி ஒரு உரையாடல், திங்கள்கிழமைக்கு முந்தைய தினம், பல ஊர்களிலும் நிகழ்கின்றன. திங்கள்கிழமை காலையில், கலெக்டர் அலுவலகம் முன், பேரணி போல் திரள்கின்றனர், மக்கள்.
நேற்று நடந்த குறைதீர்கூட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் திரண்டிருந்தனர். இவர்களிடம் பெரும்பாலானோர், இலவச வீட்டு மனைக்காக மனுக்கள் அளிக்க வந்தவர்கள்தான்.
கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தால், இலவச வீட்டுமனை கிடைக்கும் என்ற சிலரது துாண்டுதல்தான், இதற்குப் பிரதானக் காரணமாக அமைகிறது.
அரசியல்வாதிகள் 'கெத்து'
இடைத்தரகர்கள் ஊடுருவல்
''மனை கொடுக்காட்டி விட்ருவோமா... நம்பிக்கையா வாங்க... மூனு சென்ட்னா சும்மாவா'' என்று ஆளும்கட்சியினர் மட்டுமல்ல... பல்வேறு கட்சியினரும், பொதுமக்களை கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்துவந்து 'கெத்து' காட்டுவது வழக்கமானதாகிவிட்டது. இதில் இடைத்தரகர்கள் பலர், ஆளும்கட்சி என்ற முத்திரையுடன் ஏழைகளிடம் பிழியவும் காத்திருக்கின்றனர்.
இதில் பொதுநோக்கம் கொண்டவர்கள் யார்; சுயநல நோக்கத்துடன் நகர்பவர்கள் யார் என்பதை மக்களால் வேறுபடுத்திப் பார்க்க முடிவதில்லை. ஆட்களைப் பொறுத்து, ஒருவரிடம் 250 ரூபாயில் துவங்கி 5000 ரூபாய் வரை 'கறந்துவிடும்' இடைத்தரகர்கள் ஊடுருவிவிடுகின்றனர்.
நில மதிப்பு உயர்ந்தது
யோசிக்கிறது அரசு
கடந்த, 15 ஆண்டுகளில், வருவாய்த்துறை வழங்கிய நிலத்துக்கு, இரண்டு உரிமையாளர் பட்டாவுடன் போராடும் சம்பவமும் நடந்துள்ளது. முன்பு வீட்டுமனை வாங்கியவர் அப்படியே போட்டு வைத்தால், அதை ரத்து செய்துவிட்டு மற்றொரு நபருக்கு பட்டா கொடுக்கப்படுகிறது. புதிய பட்டாதாரர் போகும் போது, பழைய உரிமையாளரும் அங்கு வந்து சட்டம், ஒழுங்கு சீர்கெடும் அளவுக்கு பிரச்னை ஏற்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், நில மதிப்பு உச்சபட்சமாக உயர்ந்துள்ளதால், பட்டா வழங்க தமிழக அரசும் பலமுறை யோசிக்கிறது. 'எங்களுக்கு சிறிய வீடு இருக்கிறது; மகன்/மகளுக்கு வீடு இல்லை' என்று பலரும் மனு கொடுக்கின்றனர். பெரும்பாலானோர், அரசே வீட்டுமனை வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
ஒரு சதவீதம் பேருக்கு
கிடைப்பதே சந்தேகம்
பல்லடம் எலவந்தி, அவிநாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பிக்க வந்திருந்தனர். இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 15 ஆயிரம் பேர் வரை மனுகொடுத்து நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இவர்களில், 1 சதவீதம் பேருக்காவது பட்டா வழங்கப்படுகிறதா என்பதும் கேள்விக்குறியே.
வகை மாற்றம் செய்து
பட்டா வழங்க திட்டம்
நத்தம்புறம்போக்கு நிலத்தில் மட்டுமே பட்டா வழங்க முடியும். ஏறத்தாழ, புறம்போக்கு நிலம் இல்லாததால், அடுத்தகட்ட முயற்சியை ஆளும் ஆட்சியாளர்கள் துவக்கியுள்ளனர். நீர்நிலையில் மட்டும்தானே வீடு கட்டக்கூடாது? கல்லாங்குத்து, வண்டிப்பாதை, மந்தை போன்ற புறம்போக்கு நிலத்தை வகைமாற்றம் செய்து, பட்டா வழங்கலாம் என்ற 'பேச்சு' ஓடிக்கொண்டிருக்கிறது.
குறுஞ்செய்தி வந்தாலே குதுாகலம்
'மனுக்கள் ஏற்கப்பட்டது... பரிசீலிக்கப்படும்' என்று மொபைல்போனுக்கு எஸ்.எம்.எஸ்., வந்ததும் விண்ணப்பதாரர்கள் பலரும் குஷியாகிவிடுகின்றனர். நிறைவாக, 'உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது. தாலுகாவில் நிலம் இல்லை. நிலம் கண்டறிந்து வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டம் வரும்போது, உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும்' என்று பதில் அளித்து, ஒவ்வொரு மனுவும் முடித்து வைக்கப்படுகிறது.
இருப்பினும், ஒவ்வொரு முறையும் 'ஒருநாள் வேலை தானே கெடுகிறது' என்று கவலைப்படாமல், கூட்டம் கூட்டமாக வந்து, வீட்டுமனை கேட்டு விண்ணப்பம் செய்வது, திருப்பூரில் குறைந்தபாடில்லை!