/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாயன் கீரையும்... புல்லட் பச்சை மிளகாயும்
/
மாயன் கீரையும்... புல்லட் பச்சை மிளகாயும்
ADDED : மார் 08, 2025 11:08 PM
மாயன்கீரை, மரவெண்டை, சிறகு அவரை, புல்லட் பச்சை மிளகாய் என, விதவிதமான பெயர்களில், புதிய ரக காய்கறிகள், காண்போரை கவரும் வகையில், காய்கறிகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தின்போது, தோட்டக்கலை மற்றும் வேளாண்துறை சார்பில், கண்காட்சி அமைக்கப்படுவது, விவசாயிகளுக்கு பயனுள்ளதாக மாறியுள்ளது. கடந்த வாரம் நடந்த கூட்டத்தில், பல்லடம் தோட்டக்கலைத்துறை சார்பில், காய்கறி ரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
மர வெண்டை, மலை வெண்டை, சிறகு அவரை, மாயன்கீரை, பூனைக்காலி அவரை, மூக்குத்தி அவரை, அகத்திப்பூவுடன் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தன. இதேபோல், பவானி கத்தரி, கண்ணாடி கத்தரி, உடுமலை சம்பா ரக கத்திரி என, வகைவகையான கத்தரிக்காய்களும் இருந்தன.
புல்லட்' ரக பச்சை மிளகாய், சிவப்பு நிற பொன்னாங்கண்ணி கீரை, 'ராதிகா' ரக வெண்டைக்காய், தட்டைப்பயிறு, நெல்லிக்காய், கீரை வகைகள், நாட்டு ரக சுரைக்காய் வகைகளுடன், பல்லடம் சுற்றுப்பகுதிகளில் விளையும், 'பகுஜா' ரக பீட்ரூட் காய்கறிகளும் கண்காட்சியில் இருந்தது.
கரும்பு முருங்கை, நாட்டுரக புடலை மற்றும் பீர்க்கன், ஆங்கூர் அவரைக்காய், மலேசியன் கோவைக்காய் மற்றும் பென்சில் கோவைக்காய்களை பார்த்து, அதுதொடர்பாகவும் விவசாயிகள் ஆர்வமாக விசாரித்தனர்.