/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கிடங்காக மாற்றப்படும் குளங்கள்: பாதுகாக்க தேவை நடவடிக்கை
/
குப்பை கிடங்காக மாற்றப்படும் குளங்கள்: பாதுகாக்க தேவை நடவடிக்கை
குப்பை கிடங்காக மாற்றப்படும் குளங்கள்: பாதுகாக்க தேவை நடவடிக்கை
குப்பை கிடங்காக மாற்றப்படும் குளங்கள்: பாதுகாக்க தேவை நடவடிக்கை
ADDED : மார் 29, 2024 10:59 PM
உடுமலை;போதிய கண்காணிப்பு இல்லாததால், உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள குளங்கள், குப்பைக்கிடங்காக மாற்றப்பட்டு வருகிறது.
உடுமலை அருகே, நுாறு ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் மருள்பட்டி குளம் அமைந்துள்ளது. மழைக்காலத்திலும், பி.ஏ.பி., பாசன திட்ட கால்வாய் வழியாகவும் குளத்துக்கு நீர் வரத்து கிடைக்கிறது.
இந்த குளத்தில் நீர் நிரம்பும் போது, சுற்றுப்பகுதியை சேர்ந்த, 15க்கும் அதிகமான கிராமங்களின் நிலத்தடிநீர் மட்டம் பாதுகாக்கப்படும். இதனால், விவசாய பயன்பாடு மற்றும் குடியிருப்புகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது.
உடுமலை நகரின் அருகில் அமைந்துள்ள இந்த குளத்தில் தற்போது, பழைய கட்டடங்களை இடிக்கும் போது, வீணாகும் கட்டட கழிவுகள் கொட்டுவது அதிகரித்துள்ளது.
உபரி நீர் வெளியேறும் மதகு அருகே, இறைச்சிக்கழிவுகளையும் வீசிச்செல்கின்றனர். நீண்ட காலமாக இப்பிரச்னை நீடிக்கிறது. முன்பு, கழிவு ஏற்றி வரும் வாகனங்கள் குளத்தின் உள்ளே செல்லாத வகையில் தடுப்பு ஏற்படுத்தினர்.
இருப்பினும், இரவு நேரங்களில், குளத்துக்கு தண்ணீர் வரும் மழை நீர் ஓடையில், கழிவுகளை கொட்டிச்செல்கின்றனர். இதனால், மழைநீர் குளத்தை வந்தடைவதில் சிக்கல் நிலவுகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கிறது.
இதே போல், உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள பல குளங்கள், கழிவுகள் குவிக்கப்படும் குப்பைக்கிடங்காக மாற்றப்பட்டுள்ளன.
மழை நீர் ஓடை மற்றும் குளத்தில் கழிவுகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க தன்னார்வலர்கள் மற்றும் விவசாயிகள் சார்பில், வருவாய்த்துறைக்கு பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
படிப்படியாக குளங்களின் நீர்தேக்க பரப்பு முழுமையாக மறையும் முன் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.
எனவே, குளங்களை பாதுகாக்க தன்னார்வலர்கள் பங்களிப்புடன், கண்காணிப்பு குழு ஏற்படுத்தி, கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்தில் கழிவு கொட்டுபவர்களை கண்காணித்து போலீசில் புகார் கொடுத்து, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போது தான், குளத்தை பாதுகாப்பதுடன், நிலத்தடி நீர்மட்டத்தையும் பாதுகாக்க முடியும். இதற்கு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

